இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி: அமெரிக்கா திருப்தி கொள்ளவில்லை என தகவல்
இலங்கைக்கு அமெரிக்கா 20 வீத இறக்குமதியை விதித்துள்ள நிலையில், அதில் இன்னும் அமெரிக்கா திருப்திக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பங்களாதேஸ், கம்போடியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தங்களைப் போலவே, இலங்கைக்கான அமெரிக்க ஏற்றுமதிகள் மீதான அனைத்து வரிகளையும் நீக்குமாறு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு பரந்த அளவிலான சலுகை
அமெரிக்கா இலங்கையின் இறக்குமதிக்கான வரியை 20 சதவீதமாகக் குறைத்ததற்கு ஈடாக, இலங்கை அமெரிக்காவிற்கு பரந்த அளவிலான சலுகைகளை வழங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சலுகைகள் அமெரிக்க தொழில்துறை மற்றும் விவசாயப் பொருட்கள் இரண்டிற்கும் பொருந்தும்.
அதேவேளையில், இலங்கையிலிருந்து 1,161 தொழில்துறை மற்றும் 42 விவசாயப் பொருட்களுக்கும் அமெரிக்கா சலுகைகளை வழங்கியுள்ளது.
அதேநேரம் இலங்கை சுமார் அமெரிக்காவின் 2000 தொழில்துறை பொருட்களுக்கும், குறைந்த அளவிற்கு விவசாயப் பொருட்களுக்கும் சலுகைகளை வழங்கியுள்ளது.
உருவாகியுள்ள வாய்ப்பு
இதன்படி, கட்டணங்கள் இல்லாமல் அமெரிக்கப் பொருட்களில் மிக அதிக சதவீதப்பொருட்கள் இலங்கைக்குள் எடுத்து வரப்பட வாய்ப்புக்கள் உள்ளன.
அதேநேரம் இலங்கை 500 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள மசகு எண்ணெய் மற்றும் 300 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள எரிவாயுவையும் அமெரிக்காவிடம் இருந்து கொள்வனவு செய்ய உறுதியளித்துள்ளது.
இதேவேளை இலங்கை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதை விட நாட்டிற்கு கணிசமாக அதிகமாக ஏற்றுமதி செய்கிறது. இந்தநிலையில், அமெரிக்காவின் நலனுக்காக இதுபோன்ற பற்றாக்குறைகளைக் குறைக்க ஜனாதிபதி டிரம்ப் விருப்பம் வெளியிட்டுள்ளார் என்று அமெரிக்க தரப்பு வலியுறுத்தி வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




