இந்திய எரிபொருளால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு
இலங்கையில் கடந்த சில நாட்களாக விற்பனை செய்யப்படும் வாகனங்களுக்கான எரிபொருள் தரமற்றதென சாரதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதற்கு முன்னர் முழுமையான எரிபொருள் நிரப்பிய பின்னர் மேற்கொள்ளப்பட்ட பயணத்தின் அளவை தற்போது மேற்கொள்ள முடியவில்லை என சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எரிபொருள் விரைவாக முடிந்து விடுவதாகவும் பயணிக்கும் கிலோ மீற்றர் அளவு மிகவும் குறைவாகவே உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் பெட்ரோலின் நிறங்களும் வித்தியாசமாக உள்ளது. இரண்டு சுற்றுகள் பயணிக்கும் போதே எரிபொருள் முடிந்து விடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் தாம் கடுமையான நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருவதாக சாரதிகள் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளனர்.
எரிபொருள் தரமற்றதென நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதென சாரதிகள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளே இவ்வாறு தரமற்ற நிலையில் காணப்படுவதாக சாரதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மோட்டர் சைக்கிள் முதல் கனரக வாகனங்கள் செலுத்தும் சாரதிகள் இந்த நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளதாக கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, தரமற்ற எரிபொருள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதாக வெளியாகும் வதந்திகள் உண்மைக்குப் புறம்பானது என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் எப்போதும் சர்வதேச தரத்திற்கு அமைவாகவே சோதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் நெரிசல் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.