போலி ஆவணங்களைக் கொண்டு தடுப்பூசி இறக்குமதி: குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை
போலி ஆவணங்களை தயாரித்து, தரமற்ற வகையில் நாட்டிற்கு இம்யுனோகுளோப்ளின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பில், நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், நேற்று(29.11.2023) அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில், நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட ஐவரிடம் வாக்குமூலம் பெற்று அதன் அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு, மாளிகாகந்தை நீதவான் லோச்சனா அபேவிக்ரம குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
வாக்குமூல பதிவு
அரச கணக்குகள் திணைக்களத்தின் நிதி பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மற்றும் நிதி ஊக்குவிப்பு திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் அவர்களில் அடங்குகின்றனர்.
தற்போது, திறைசேரியின் பிரதி செயலாளரிடம், குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், போலி ஆவணங்களை தயாரித்து, தரமற்ற வகையில் 22 ஆயிரத்து 500 இம்யுனோகுளோப்ளின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்துள்ளதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |