மெகசின் உட்பட 3 சிறைச்சாலைகளில் கைதிகள் இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தம்
சிறையில் உள்ள கைதிகளிடையே தட்டம்மை நோய் பரவிய காரணத்தினால் மூன்று சிறைச்சாலைகளிலிருந்து கைதிகளை இடமாற்றம் செய்ய நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, வெலிக்கடை சிறைச்சாலை, மெகசின் சிறைச்சாலை மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை ஆகியவற்றில் தட்டம்மை நோய்த்தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை சிறைச்சாலை ஆணையாளர் சேனக பல்லதென்ன தெரிவித்துள்ளார்.
சிறைக் கைதிகளிடையே பரவும் தொற்று நோய்
தற்போதைய நிலை குறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைதிகளை மீண்டும் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளை விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, இன்று(09.11.2026) குறித்த மூன்று சிறைச்சாலைகளிலிருந்தும் கைதிகள் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. இந்தச் சூழலை விளக்கி, சிறைச்சாலை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு எழுத்துப்பூர்வ அறிவித்தல்களையும் வழங்கியுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்திற்கு எதிராக மன்றில் 26 மனுக்கள் - மீண்டும் விசாரணை ஆரம்பம்