கடலரிப்பு அபாயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் நேரடி விஜயம் மேற்கொண்டு உடனடி தீர்வு
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் வேண்டுகோளுக்கமைய அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம கல்முனை கடற்கரைப்பகுதியில் ஏற்படும் கடலரிப்பு அபாயம் உள்ள இடங்களை புதன்கிழமை(2) நேரடி விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டு உடனடி தீர்வு வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
குறித்த நிகழ்வில் அரசாங்க அதிபருடன் கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் Groynes - கடற்கரை பாதுகாப்பு கல்லணை திட்ட கொந்தராத்துகாரர் உள்ளிட்ட தரப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் நம்பிக்கையாளர் சபையினருடன் பிரதேச மீனவர்களும் இணைந்து கடலரிப்பு அபாயம் தொடர்பான கள நிலைமைகளை விளக்கினர்.
வழங்கப்பட்ட உத்தரவு
நிலைமையை ஆய்வு செய்த மாவட்ட அரசாங்க அதிபர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், கொந்தராத்துகாரருக்கும் இடைநிறுத்தப்பட்ட Groynes திட்ட வேலைகளை உடனடியாக ஆரம்பித்து இரண்டு வாரங்களுக்குள் முடிக்க உத்தரவுகள் வழங்கினார்.
இதன்பிரகாரம் கடலோர பாதுகாப்பு கல்லணை திட்ட வேலைகள் நாளையிலிருந்து ஆரம்பிக்கப்படுவதற்கான உத்தரவாதம் கொந்தராத்துகாரர் தரப்பில் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


