வெல்லப்போது யார்? சர்வதேச நாணய நிதியமா? இலங்கையா? (காணொளி)
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதா? செல்வது இல்லையா? என்பதே இன்று, இலங்கை அரசாங்கத்தின் முன் இருக்கும் பிரதான கேள்வியாக உள்ளது.
தற்போதைய பொருளாதார தேக்கநிலையை தீர்க்க, சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டும் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்தும் கோரி வருகின்றன.
அமெரிக்கத் தூதரகமும் இந்த வலியுறுத்தலை விடுத்து வருகிறது.
இதற்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லப்போவதில்லை என்று அரசாங்கம் இறுமாப்புடன் இருந்தநிலை மாறி, தற்போது அதற்கு சார்பான நிலையை காட்டி வருகிறது
இதில் ஒரு கட்டமே, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிலர், சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனா்
முன்னாள் அமைச்சர் அநுர பிாியதர்சன யாப்பாவே இதில் முக்கியமானவர்.
அதேபோன்று அரசாங்கத்தின் பங்காளியாக இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது.
இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை கோர ஏன் இலங்கை அரசாங்கம் தயங்குகிறது என்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, விளக்கம் ஒன்றை அளித்திருந்தார்.
கொமிஷன் என்ற தரகுப்பணத்தை பெற்றுக்கொள்ளமுடியாது என்பதற்காகவே சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல அரசாங்கம் தயங்குகிறது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு மத்தியில் இதுவரை நிதிக்கோரலுக்காக இலங்கை அரசாங்கத்திடம் இருந்து உத்தியோகபூர்வ கோரிக்கை விடுக்கப்படவில்லை என்று அண்மையில் இலங்கைக்கு வந்து சென்ற சர்வதேச நாணய நிதியத்தின் குழு தலைவர் மஷாகிரோ நொசாக்கி தெரிவித்துள்ளார்.