உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடு
இலங்கைக்கு நீட்டிக்கப்பட்ட நிதி வசதியை வழங்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்களினால் தற்போது ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த தூதுவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் இலங்கை தூதரகத்தின் தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோரின் பங்கேற்புடன் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்படுகின்றது.
இலங்கைக்கு அனுமதிக்கப்பட்ட மொத்தக் கடன் தொகையான கிட்டத்தட்ட 03 பில்லியன் அமெரிக்க டொலர்களில் 330 மில்லியன் டொலர்களை உடனடியாக வழங்க முடியும் என சர்வதேச நாணய நிதியத்தின் தூதரகத் தலைவர் பீட்டர் ப்ரூவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கடன் நிலைத்தன்மையை அடைவதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைய எதிர்வரும் ஏப்ரல் இறுதிக்குள் கடன் மறுசீரமைப்பு மூலோபாயத்தை இலங்கை முன்வைக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.
பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கை எடுத்துள்ள சவாலான கொள்கை நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடப்போவதில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
எந்தவொரு நாட்டின் தேர்தல் நடவடிக்கைகளிலும் சர்வதேச நாணய நிதியம் தலையிடாது என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதரகத்தின் தலைவர் மசாஹிரோ நோசாக்கி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் பரிந்துரை செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்
