இலங்கையில் பணவீக்கம் அதிகரிப்பதற்கான காரணத்தை வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம்
அரசாங்கத்திற்கு நிதியளிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி பணத்தை அச்சிடுவது பணவீக்கத்தை தூண்டுவதாக இலங்கைக்கான தொடர்பிலான, சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரி பீட்டர் ப்ரூயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகரித்து வரும் பணவீக்கத்தை தடுப்பதற்கு மத்திய வங்கியின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதும் பண நிதியளிப்பை நீக்குவதும் மிக முக்கியமான பகுதியாக இருக்கும் என அவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் சரியான சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் மத்திய வங்கிச்சட்டம், இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதார சீர்திருத்தங்கள்
2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது மிகக் குறைவான தொகை அல்ல என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரி பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை மீண்டும் வலுவான மற்றும் நீடித்த வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உதவும் விரிவான பொருளாதார சீர்திருத்தங்களுக்கு இலங்கை உறுதியளித்துள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் இந்த நிதியானது சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவம் மற்றும் நிறைவேற்று அதிகாரியின் ஒப்புதலின் பேரில் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அதிகாரிகள் ஏற்கனவே தொடங்கியுள்ள பொருளாதார சீர்திருத்தத்தைத் தொடர
வேண்டும். அத்துடன் கடனளிப்பவர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை
ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.