வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும்! நாடாளுமன்றில் கடுமையான எச்சரிக்கை
தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும். அதனால் சாதாரண வங்கி வைப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (26.04.2023) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடுமையான நிபந்தனைகள்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய காலத்துக்குள் தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை தவிர்த்து மாற்றுத்திட்டம் ஏதும் இல்லாத காரணத்தால் நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
சர்வதேச கடன் மறுசீரமைக்கப்படும்,தேசிய கடன் மறுசீரமைக்கப்பட மாட்டாது என அரசாங்கம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது.
சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை கிடைத்ததன் பின்னர் தேசிய கடன் மறுசீரமைக்கப்படும் என அரசாங்கம் குறிப்பிடுகிறது.
சுய புத்தியுடன் செயற்பட வேண்டும்
தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும்.அதனால் சாதாரண வங்கி வைப்பாளர்கள்,முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடி ஏற்படும்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் அரசியல்வாதிகள் எவரும் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்படும்.
ஆகவே ஜனாதிபதிக்கு புகழ்பாடு அரசியல்வாதிகள் அனைவரும் சுய புத்தியுடன் சிந்தித்து செயற்பட வேண்டும். வழங்கப்பட்ட அடிப்படை ஆலோசனைகள் இலங்கையில் செயற்படுத்தப்படுகிறதா என்பதை சர்வதேச நாணய நிதியம் கண்காணிக்க வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.