சர்வதேச நாணய நிதிய கடன்தொகை ஜுன் முதல் வாரத்தில் : நிதியமைச்சு நம்பிக்கை
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் இலங்கைக்கான ஆறாவது மற்றும் ஏழாவது தவணை கொடுப்பனவுகள் ஜூன் முதல் வாரத்தில் கிடைக்கப்பெறும் என்று நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான ஆரம்ப ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அமைச்சு கூறியுள்ளது.
பொருளாதார சீர்திருத்தங்கள்
கடந்த 27ஆம் திகதி, இலங்கையின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின் கீழ் மேலும் 695 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்க IMF நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தது.

அதன்படி, மார்ச் 2023இல் அங்கீகரிக்கப்பட்ட 48 மாத கால திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மொத்தத் தொகை இப்போது 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
2022இல் நாடு சந்தித்த கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தக் கடன் வசதி அங்கீகரிக்கப்பட்டது.
நிலவிய கடுமையான நெருக்கடிகள்
இந்தத் திட்டத்தின் கீழ் ஒப்புக் கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை இலங்கை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது என்று IMF கூறியுள்ளது.

இலங்கையின் பெட்ரோலியம் மற்றும் மின்சாரத் துறைகளில் முன்னர் நிலவிய கடுமையான நெருக்கடிகள் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளதாக நிர்வாகச் சபை குறிப்பிட்டது.
மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலக்கட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து அளவுசார்ந்த இலக்குகளையும் அரசாங்கம் வெற்றிகரமாக அடைந்துள்ளதாகவும் சபை தெரிவித்தது.
விஜயின் தமிழகத் தேர்தல் வெற்றியும் இலங்கைத் தீவின் பிரதிபலிப்புகளும்..! 16 மணி நேரம் முன்
சூர்யாவின் திரை வாழ்க்கையில் இதுவரை நடக்காத விஷயம்.. தமிழக வசூலில் கருப்பு திரைப்படம் ருத்ரதாண்டவம் Cineulagam