பல மில்லியன் நிவாரணம்! அடுத்த ஜனாதிபதியால் எதையும் மாற்ற முடியாது: பந்துல திட்டவட்டம்
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு எமக்கு 3855 மில்லியன் நிவாரணம் கிடைக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
இது தொடர்பில் மேலும் கூறுகையில், இன்னும் சில மாதங்களில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் இருந்தாலும் சரி, யார் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் சரி, கடன் ஒப்பந்தத்தில் மாற்றம் ஏற்பட்டால், 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை உருவாக்க முடியாது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களும், உலக வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கி 300 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வழங்குவதாக உறுதியளித்துள்ளதுடன் எமக்கு 3855 மில்லியன் நிவாரணம் கிடைக்கும்.
உறுதி
வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற, தற்போதுள்ள நிதி அமைச்சர் மற்றும் நிதி அமைச்சும் சர்வதேச நாணய நிதியத்தில் கையொப்பமிட்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய, 2025ஆம் ஆண்டளவில் 5018 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு வள இடைவெளி இருக்கும் என்று மதிபீடு செய்யப்பட்டுள்ளதுடன், அதில் 663 மில்லியன் நிதியை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது.
எனவே சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது நடைமுறையில் உள்ள கடன் ஒப்பந்தம் தேர்தல் அல்லது ஏனைய விடயங்களை பொருட்படுத்தாது 2027 ஆம் ஆண்டு வரை அதே வழியில் செயற்படும்.''என கூறியுள்ளார்.