சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதி பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படும் - ஜனாதிபதி
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்துகொள்ளும் உடன்படிக்கை இலங்கையின் பிரச்சினைகளை முழுமையாக தீர்க்காது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை தனது கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வழிகளைப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார். கண்டியில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி, இந்த போராட்டங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் சாத்தியமான உடன்படிக்கையை தாமதப்படுத்தியதாக தெரிவித்தார்.
பிரதமராக பதவியேற்ற பிறகு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு வார்த்தை நடந்து வந்ததாக அவர் கூறினார். எனினும், கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட ஸ்திரமின்மையால் பேச்சுவார்த்தைகள் தடைபட்டதாக அவர் கூறினார்.
ஆகஸ்ட் மாதத்தின் இறுதிக்குப் பின்னரே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்படும் வரை ஏனைய நாடுகள் நிதி உதவி வழங்க தயாராக இல்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நேரத்தை வீணடிப்பதில் அர்த்தமில்லை
தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையினால் இலங்கை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முழுமையாக தீர்வு காண முடியாது.
இலங்கை தனது கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.
இந்த நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையோ அல்லது வேறு யாரையோ குற்றம் சுமத்தி நேரத்தை வீணடிப்பதில் அர்த்தமில்லை என விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாறாக, இலங்கை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதில் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.