முல்லைத்தீவில் சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்படும் மரங்கள்: தடுக்குமாறு மக்கள் கோரிக்கை!
முல்லைத்தீவு - விசுவமடு நாச்சிக்குடா பகுதியில் சட்டவிரோதமாக பெறுமதி மிக்க மரங்கள் வெட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பான முறைப்பாடுகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுகுடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஸ்வமடு பகுதியில் அண்மைக்காலமாக மக்கள் குடியிருப்பு பகுதிகள், பொது இடங்கள் மற்றும் நெத்தலி ஆறு பகுதிகளில் உள்ள மரங்கள் இரவு வேளைகளில் திருடப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
முறைப்பாடு
அந்தவகையில், கடந்த 15ஆம் திகதி பொங்கல் தினத்தன்று வீட்டின் உரிமையாளரான 85 வயதுடைய முதியவர் சிகிச்சைக்காக உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

அப்போது, வீட்டு உரிமையாளருக்கு சொந்தமான காணியில் இருந்த பெறுமதியான முதிரை மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக முதியவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த மரங்கள் நள்ளிரவு நேரத்தில் வெட்டப்பட்டு, உழவு இயந்திரத்தின் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் புதுகுடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புது குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பாக விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறாதிருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் விசுவமடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

