கசிந்த இரகசிய ஆவணங்கள்! புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் வெளியான பிரித்தானியாவின் திட்டம்
ஒவ்வொரு மாதமும் 3,000 புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டு பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோத புலம்பெயர்வு மசோதாவை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தும் சுயெல்லா பிரேவர்மனின் முதன்மையான புகலிடக் கோரிக்கை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் தொடர்பில் கசிந்த ஆவணங்களிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சட்டவிரோத புலம்பெயர்வு
விதிமீறலில் ஈடுபட்டு, பிரதமரால் பதவி காப்பாற்றப்பட்ட உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன், சட்டவிரோத புலம்பெயர்வு மசோதா ஒன்றை நிறைவேற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.
சுவெல்லாவின் சட்டவிரோத இடம்பெயர்வு மசோதாவின்படி, அனுமதியின்றி பிரித்தானியாவுக்குள் நுழைவோர், இனி பிரித்தானியாவில் தங்கி புகலிடம் கோர முடியாது.
அதற்கு பதில், அவர்கள் கைது செய்யப்பட்டு, காவலில் அடைக்கப்பட்டு, தங்கள் சொந்த நாட்டுக்கோ அல்லது ருவாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கோ நாடுகடத்தப்படுவார்கள்.
நாடுகடத்தல்
இது தொடர்பான ஆவணங்கள் கசிந்த நிலையில், செப்டம்பர் மாதம் முதல், 1,600 பேரை தடுப்புக் காவல் மையங்களில் அடைக்கவும், 2024 ஜனவரியிலிருந்து, 3.163 பேரை தடுப்புக் காவல் மையங்களில் அடைக்கவும் திட்டம் தயாராகிவருவது தெரியவந்துள்ளது. அதாவது, ஜனவரியிலிருந்து, மாதந்தோறும் 3.163 புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் ஊடாக பிரித்தானியா ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கைது செய்து நாட்டை விட்டுத் துரத்த தயாராகிவருகிறது என புலம்பெயர்தல் ஆதரவு தொண்டு நிறுவனங்கள் விமர்சித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |