முல்லைத்தீவில் அதிகரிக்கும் சட்டவிரோத கடற்றொழில்: கடற்படையினர் அலட்சியம்
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் சாலை தொடக்கம் கொக்குளாய் வரையான கடற்பரப்பில் அதிகரித்துவரும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடற்படையினர் தவறிவருவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிடம் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் பல படகுகள் மின் விளக்கினை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதாகவும் இதன்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனால், சாதாரண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கடல்வளம் அழிக்கப்படுவதாகவும் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் ஆகியோர் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் வலியுறுத்தல்
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த பொலிஸாரின் ஒத்துழைப்பும் இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் தேவை எனவும் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, இவற்றை நீரியல் வளத் திணைக்களத்தினர், கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து
கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர்
வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, கச்சதீவு பிரச்சினையை ஒரு தேர்தல் கோசமாகத்தான் சொல்லமுடியும் என்பதோடு இந்தமுறை வித்தியாசம் ஆட்சியில் இருக்கின்ற மத்திய அரசாங்கம் இதைப்பற்றி கதைக்கின்றார்கள் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இவை தேர்தலுக்காக சொல்லப்படும் பொய்யான பரப்புரை என்பதோடு அதில் எந்த உண்மையும் இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லை தாண்டி சட்டவிரோத கடற்றொழிலில் இந்திய கடற்றொழிலாளர்கள் ஈடுபட மாட்டார்கள் என உத்தரவாதம் தந்தால் தமிழ்நாட்டு முதலமைச்சருடனும் பாண்டிச்சேரி முதலமைச்சருடனும் இது தொடர்பாக கலந்துரையாட தயாராக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மீன்களின் இனப்பெருக்க காலகட்டத்தில் தொழிலுக்கு செல்லக்கூடாது என்ற முறை இருப்பதால் இந்திய இழுவைப்படகுகள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வராது எனவும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |