சட்டவிரோத குடியேற்றம் தடுக்கப்பட வேண்டும்: பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கோரிக்கை
இலங்கைப் பிரஜைகள் ஐக்கிய இராச்சியத்திற்குள் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளாக பிரவேசிப்பதைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், இலங்கையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் இலங்கை வந்திருந்த ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக பணிப்பாளர் பென் மெல்லருடன், ஹல்டன் மற்றும் டிரன் அலஸ் கலந்துரையாடிபோதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டம்
இதன்போது இருதரப்பினரும் பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றி விரிவாக விவாதித்த நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு பேர் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
எனினும் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நான்கு பேரே பயங்கரவாத சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அலஸ் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் விதிகள் மற்றும் சட்டங்களை சரியான முறையில் பயன்படுத்துவது குறித்து இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒரு பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்படும் என்றும் உயர்ஸ்தானிகர் ஹல்டன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |