தமிழரசுக் கட்சியின் ஊடக சந்திப்பை புறக்கணித்த சுமந்திரன் எம்.பி
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பை கட்சியின் பேச்சாளாரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) புறக்கணித்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியாவில் இன்று (19.05.2024) இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பையே அவர் புறக்கணித்துள்ளார்.
பேச்சாளர் தீர்மானங்கள்
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் காலை 10.30 மணியில் இருந்து மாலை 7 மணி வரை நடைபெற்றுள்ளது.
கூட்ட முடிவில் தீர்மானங்களை அறிவிப்பற்காக ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்திருந்த நிலையில் கூட்டம் நிறைவடையும் வரை நீண்ட நேரமாக ஊடகவியலாளர்கள் வெளியில் காத்து நின்றனர்.
கூட்டம் முடிவடைந்ததும் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான ஏம்.ஏ.சுமந்திரன், முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் ஆர்னோல்ட், பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்ட சிலர் வெளியில் வந்துள்ளனர்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் பேச்சாளர் தீர்மானங்களை தராமல் செல்கிறீர்கள் எனக் கேட்ட போது, ஏம்.சுமந்திரன் அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்.அவர்களிடம் போய் கேளுங்கள் எனக் கூறியிருந்தார்.
சட்ட விடயங்கள்
ஊடகவியலாளர்கள் மண்டபத்திற்குள் சென்றதும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பேச்சாளர் எங்கே என வினவிய போது, ஊடகவியலாளர்கள் அவர் வெளியில் செல்கிறார் எனக் கூற அங்கிருந்தவர்கள் அவரை அழைத்திருந்தார்கள். ஆனாலும் அவர் சமூகளிக்காது சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களை கருத்து தெரிவிக்குமாறு கூற அவர் கூட்ட தீர்மானங்களை ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். சட்ட விடயங்களை கே.வி.தவராசா தெரிவித்திருந்தார்.
இதேவேளை, கட்சியின் செயலாளர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களையும் ஊடக மாநாட்டில் அமருமாறு கேட்கப்பட்ட போதும் ஊடக மாநாட்டில் அமராது நின்ற நிலையில் அதனை அவதானத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |