எந்தப் பெயரைக் கொண்ட தீர்வையும் ஏற்கத் தயார்! கஜேந்திரகுமாருக்கு சிவஞானம் பதிலடி
பிரிக்கப்படாத நாட்டுக்குள் மீளப் பெற முடியாத அதிகாரப் பகிர்வில் சமஷ்டிக் கட்டமைப்பைக் கொண்ட எந்தப் பெயரைக் கொண்ட தீர்வையும் நாம் ஏற்கத் தயார், நாம் ஒற்றையாட்சியை ஏற்கவுமில்லை, சமஷ்டியைக் கைவிடவுமில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் கூட்டாகச் செயற்பட எல்லாக் கட்சிகளுடன் பேசினோம். எல்லோரின் வீடுகளுக்கும் தேடிப் போனேன். ஒருவரும் ஒத்துழைக்கவில்லை.
தீர்வை ஏற்க தயார்
பிரிக்கப்படாத நாட்டுக்குள் மீளப் பெற முடியாத அதிகாரப் பகிர்வில் சமஷ்டிக் கட்டமைப்பைக் கொண்ட எந்தப் பெயரைக் கொண்ட தீர்வையும் நாம் ஏற்கத் தயார்.
ஒற்றையாட்சியை ஏற்கவுமில்லை. சமஷ்டியைக் கைவிடவுமில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் செல்வராசா கஜேந்திரனும் சொல்வது போல் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்யவில்லை. கடல் வத்தும் கடல் வத்தும் எனப் பார்த்துக் கொக்கு மாதிரி குடல் வத்திப் போக முடியாது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தங்களுடன் பேசியிருக்கலாமே என்கின்றார்.

மாகாண சபையை வேண்டாம் எனச் சொல்பவரை எவ்வாறு அழைத்துச் செல்ல முடியும். அரசியல் தீர்வை அடைந்த பின்னர் ஏனைய பிரச்சினையைப் பார்க்கலாம் என்கிறார். அரசியல் தீர்வு வருவதற்குள் எல்லாம் முடிந்து விடும். இணைந்து செயற்படுவது தொடர்பில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தோம். அடுத்த மாத முற்பகுதியில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் பேசப் போகின்றோம்.
அதை ஒத்துழைப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாருக்கும் வழங்கினோம். பொது விடயத்தில் அரசமைப்பும் வரும் மாகாணசபையும் வரும். கொச்சைப்படுத்தும் கருத்துக்களைச் சொல்ல வேண்டாம். மேட்டுக்குடியில் இருந்து நாங்கள் வரவில்லை என்பதால், நீங்கள் நாம் சொல்வதைக் கேட்கமாட்டீர்களே.
புதிய அரசியல் தீர்வு
ஜனாதிபதியுடனான சந்திப்புக்குப் பின்னர் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசமைப்பொன்றின் அவசியம் குறித்து இதன்போது ஆராயப்பட்டதோடு, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு பொருத்தமற்றது என்பதால் அதற்காகப் புதிய அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டுமென அரசு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இங்கு குறிப்பிட்டார் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடைய வரைபு வந்த பின்னர் பேசலாம் என்றே சொன்னோம். நாங்கள் அரசமைப்பு வரையோனும் எனக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்கின்றார். அது பிழையான அணுகுமுறை. தமிழரசுக் கட்சி இறுமாப்புடன் கதைக்கவில்லை. கஜேந்திரகுமாருக்கும் கடிதம் எழுதியிருக்கின்றோம். அடக்கமாகப் பேசக் காரணம் ஒற்றுமையாகப் பயணிக்க விரும்புகின்றோம்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்மைத் தொடர்ச்சியாக விமர்சிக்க முடியாது. நியாயமான விமர்சனத்தை ஏற்கலாம். துரோகம், காட்டிக்கொடுப்பு, இனத்துரோகி என்ற வசனங்களே இவர்களுக்குத் தெரியும். மக்களுக்குப் பதில் சொல்ல நாம் தயார். சொல்லில் தொங்கிக் கொண்டு மக்களை ஏமாற்ற வேண்டாம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாகாண சபை வேண்டாம் என்று சொன்னால் நாம் ஒத்துப்போக முடியாது.

சுமூகமான உறவு
கஜேந்திரகுமாருடன் சுமூகமான உறவைப் பேணவே விரும்புகின்றோம். நீங்கள் அடிக்க வெளிக்கிட்டால் நாம் மென்மையாகத் திருப்பி அடிப்போம். எங்களுடைய வாக்கு வங்கி குறைந்து விட்டதுதான். ஏன் உங்கள் வாக்கு வங்கி குறையவில்லையா? எங்களை நீங்கள் தாக்கியதால்தான் தேசிய மக்கள் சக்தி வளர்ந்தது. சமஷ்டியைக் கைவிடமாட்டோம் என ஜனாதிபதிக்கு முன்னாலேயே சொல்லி இருக்கின்றோம்.
நான் இனித் தேர்தல் கேட்கப் போவதில்லை. ஆனால் எமது கட்சியில் கைவைத்தால் எந்தத் தரத்தில் பதில் வருகின்றதோ அதே தரத்தில் பதில் கொடுக்கப்படும். ஒற்றுமையாக இனம் சார்ந்து ஒவ்வொருவரும் தங்கள் தளத்தில் இருந்து கொண்டு பொது விடயங்களில் ஒன்றாகப் பொது மையத்தில் இருந்து செயற்பட அழைப்பு விடுக்கின்றேன். இதற்குச் சாதகமாகப் பதிலளியுங்கள்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சாதகமாகப் பதிலளித்துள்ளது. கஜேந்திரகுமாரும் கடிதம் கிடைத்துள்ளது என்று பேட்டியளித்துள்ளார். கூட்டுத் தலைமையாகப் பொது விடயங்களில் ஒன்றாகுவோம். மக்கள் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். இனியாவது தமிழ்த் தேசியக் கட்சிகள் பொது விடயத்தில் இணைந்து பேச வேண்டும்." - என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |