தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலும் பின்னரான கட்சியின் எதிர்காலமும்
ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் தங்களது அடுத்த தலைவர் அல்லது தலைவர்கள் தெரிவிற்கு பின்னராக உடைந்து சென்ற வரலாறுகள் இலங்கையின் பெரும்பான்மைத் தேசியக் கட்சிகளில் இருந்து தமிழ்த் தேசியக் கட்சிகள் வரைக்கு விரிந்திருப்பது ஒன்றும் வியப்பிற்குரிய விடயமாக நோக்கவேண்டியதில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அடையாளத்துடன் மீள் அரசியற்பிரவேசத்தினை பல அரசியல் புறக்காரணிகளின் விசேடமான தாக்கத்தில் உருவாகிய தமிழரசுக்கட்சி ஆரம்பித்ததில் இருந்து கணிசமான தேய்வுநிலையையே சந்தித்து வந்திருக்கின்றது.
அதன் மிக உச்சக் நிலையில் தமிழரசுக்கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற இணைப்பில் இருந்த ஏனைய கட்சிகளை நீக்கி தன்னை தனியாகவே விடுவித்துக்கொண்டுள்ளது.
அரசியல் சித்தாந்த தலைமை
ஒரு நீண்ட நெடிய அரசியல் பயணத்தினை உடைய கட்சியாக தன்னை அறியப்படுத்திக்கொண்டாலும் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளை 2009க்கு பின்னராக காலப்பகுதியில் அதாவது சுயமான அரசியல் தீர்மானமெடுக்கும் வல்லமை பெற்ற காலத்திற்கு பின்னரானதாகவே நோக்கவேண்டியுள்ளது.
புறச்சூழல் அழுத்தங்கள் அன்றி இதுவரை தமிழரசுக்கட்சி எந்தவித கூட்டு முயற்சியையும் முனையவுமில்லை முன்னெடுக்கவும் இல்லை.
மாறாக பிரிந்து தனித்து வெளியேறி இருக்கின்றது. இங்கே நெகிழ்ச்சியான அரசியல் நோக்கு அல்லது இராஜதந்திர கூட்டிணைவு என்ற விடயங்கள் தோற்றுப் போகும் ஒரு அரசியல் சித்தாந்த தலைமைகளே காணப்பட்டுள்ளன.
இன்னமும் அது ஒரு சுத்தமான தனித் தமிழரசுக் கட்சியாக எந்தவொரு தேர்தலையும் சந்திக்கவில்லை. தமிழரசுக் கட்சி இவ்வாறானதொரு இறங்கு நிலையிலேயே 2024ம் ஆண்டில் மாநாட்டினை சந்திக்க தயாராகிவருகின்றது.
இங்கே இம்முறை மும்முனைப் போட்டிகள் விரிந்து உள்ளன. உள்ளக ஒழுக்கத்தில் மிகவும் தளர்வானதெரு நிர்வாகக் கட்டமைப்பினையே தமிழரசுக் கட்சி பின்பற்றிவருகின்றது என்பதை இவ்விடயமும் அண்மைக்கால பல விடயங்களும் உறுதிப்படுத்தி நிற்கின்றன.
“போட்டி இருக்குமானால் கார்த்திகை 30ம் திகதிக்கு முன்னர் மத்திய செயற்குழு தீர்மானிக்கும் இடத்தில் அல்லது இடங்களில் பொதுச் சபை உறுப்பினரை பொதுச் செயலாளர் கூட்டி இரகசிய வாக்கெடுப்பு நடைபெறும்.
இதற்குரிய நிர்வாக ஒழுங்குகளை மத்திய செயற்குழு நிர்ணயிக்கும்” இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பு விதி 9ன் “எ” சரத்து இவ்வாறு வரையறுக்கின்றது.
அதற்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரனும் சுமந்திரனும் வடக்கு மாகாணத்தில் இருந்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கிழக்கு மாகாணத்தில் இருந்தும் அபேட்சகர்களாக தோன்றியுள்ளனர்.
சூறாவளிப் பிரச்சாரம்
விதி 2 இல் சரத்து ஆ வில் 2 ம் பிரிவில் “சமூக உயர்வுகளையும் - தாழ்வுகளையும் குறிப்பாக ஒருபகுதி மக்களிடையே நிலவும் தீண்டாமையையும் களைந்து இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களை ஒன்றுபடுத்தி புத்துயிரளித்தல் “ என்ற அடிப்படைக் கொள்கையை ஏற்று கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் ஆகின்றார்கள்.
தமிழ் பேசும் மக்களை ஒன்றுபடுத்தி புத்துயிரளிக்க உறுதிகொண்டவர்களுள் இந்த அபேட்சகர்களும் அடங்கும் நிலையில் ஒவ்வாரு கோட்டக் கிளையிலும் தலைவர் தெரிவுக்காக இரகசிய வாக்களிக்க தகுதி உடையவர்களுக்கும் ஏனையவர்களுக்குமாக திசைமுகப்படுத்தல் கூட்டங்கள் சூறாவளிப் பிரச்சாரமாக இடம்பெற்றுவருகின்றன.
இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் வலுவாக உட்கட்சியில் நபர்சார்ந்த கட்டமைப்புக்களின் வீரியத்தினை மேலும் வலுப்பெறச்செய்வதுடன் எதிரான நிலைப்பாடுகள் உடைய ஒரு அணியை நிரந்தரமாக உருவாக்குவதற்கு வழிவகுக்கின்றன.
இவ்வகையில் உட்கட்சி நிர்வாக நிலவரங்கள் இருக்க வடக்கு மாகாணத்தில் தமிழரசுக் கட்சிக்கு உரிய 03 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரே தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் நிலை விருப்பு வாக்குகள் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரனும் சுமந்திரனும் போட்டியிடும் அதே வேளை கிழக்கு மாகாணத்தில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் போட்டியிடுகின்றனர்.
இரு வேறு அரசியல் நம்பிக்கையைக் கொண்ட இருவர் ஒரே கட்சியில் ஒரு பதவிக்காக ஒரே தளத்தில் போட்டியிடுவது ஒரு முரண் நிலைக் கருத்தாகும்.
இது வாக்களிக்க தகுதி உடையவர்களை மாத்திரம் அல்ல கட்சியைச் சார்ந்த அனைவருக்கும் உள்ளேயே ஒரு நிரந்தர பிரிவுகளை நிலையாக உருவாக்கும் என்பது கடந்தகால வரலாறுகள்.
சிறீதரனின் ஆதரவு
இது அரசியல் கட்சிகளில் மாத்திரம் அல்ல ஆயுதக் குழுக்களிலுமே உருவாகி உள்ளன. இவ்வாறான அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசியற் கட்சிகள் ஆகினும் ஆயுதக் குழுக்கள் ஆகினும் சிதறுண்ட வரலாறுகள் மாத்திரமே உண்டு.
அதனை மறுத்து அனுசரித்து பயணிக்கும் பக்குவம் இருக்கும் என எண்ணுவது மிகத் தவறானதொரு எடுமானமாகும், காரணம் அவ்வளவு புரிதலும் பக்குவமும் உடையவர்கள் தெரிவிற்கு சென்றாலும் தேர்தலை நாடமாட்டார்கள்.
இத்தேர்வானது திட்டமிட்ட வகையில் நடக்குமாக இருந்தால் இம் மூவரில் இருவர் தோற்கவேண்டியவர்களே. அவ்வகையில் தோற்கும்போது அதன் விளைவுகள் கட்சிக்கு மிகவும் சிக்கலானதாக இருக்கும்.
இறுதியாக நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தலுக்கு தயார்ப்படுத்தப்பட்ட தனித் தழிழரசுக் கட்சி உறுப்பினர்களது புதிய பங்கேற்புடனேயே பெரும்பாலான மூலக் கிளைகளில் இருந்து நிர்வாகங்கள் பிரதேச, தொகுதி, மாவட்டக் கிளைகளுக்கு சென்றிருக்கின்றார்கள்.
வடக்கு கிழக்கில் காணப்படும் பிரதேசக் கிளைகளில் கணிசமானவை சுமந்திரன நெறிப்படுத்தலில் அமைக்கப்பட்டன. சில பிரதேச கிளைகள் மாத்திரம் சிறீதரனின் ஆதரவில் அமைக்கப்பட்டன.
மேலும் மிகச் சில ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆதரவில் அமைக்கப்பட்டன. இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா தோல்வியுற்றதும் அவரிடம் இருந்து கணிசமான கட்சிப் பணிகள் நிழல்த் தலைவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது ஆளுக்காள் வேறுபட்ட விகிதாசாரத்தில் பிரயோகிக்கப்பட்டும் வந்துள்ளது. அதனை கட்சித் தலைவராக இருந்த மாவை சேனாதிராசாவால் கட்டுப்படுத்த முடியவில்லை.
அங்கே ஆரம்பித்த உட்கட்சி ஒழுக்கத்தின் நிலைதான் இன்றைய தலைவர் தேர்தல் வரைக்கும் வளர்ந்து இருக்கின்றது. இதுவரையான பல உட்கட்சி நடவடிக்கைகளை சிரேஸ்ட தலைவரான சம்பந்தரும் ரசித்துக்கொண்டுதான் இருந்திருக்க வாய்ப்பிருந்திருக்கின்றது.
தமிழரசுக் கட்சிக்குரிய இதுவரைக்குமான மொத்த உறுப்புரிமைகளின் எண்ணிக்கையை திரட்டிப்பார்த்தால் உண்மையில் இந்தக் கட்சி வடக்கு கிழக்கில் போட்டியிட்டு இத்தனை நாடாளுமன்ற ஆசனங்களை கைப்பற்றியதை நம்பமுடியாது.
தமிழரசுக் கட்சியின் வளர்ச்சி
காரணம் கடந்த தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் முதலாம் வேட்பாளர் பெற்ற வெற்றிவாக்குகளின் 50 சதவீதத்தினை கூட வடக்கு கிழக்கு மாகாணங்களில் உறுப்புரிமையாக்க முடியாது காணப்படுகின்றது.
தமிழரசுக் கட்சிக்கான தேர்தல் வாக்குகளின் உண்மை நிலவரம் இதுவரை கட்சியின் மீள்அரசியல் பிரவேசத்திற்கு பின்னர் எங்கும் பெறப்படவில்லை. இது ஒரு சொரியல் காணிபோன்றே காணப்படுகின்றது.
இவ்வாறான பின்னணியில் சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோரே தலைமைப் பதவியின் தேர்தலில் நேராக மோதப்போகின்றார்கள்.
யோகேஸ்வரன் காற்பந்தின் ஏமாற்று உதைகாரராகவே செயற்படப்போகின்றார். இவரது அழுத்தமானது தேர்தல் என்பது இறுதிசெய்யப்பட்டதுடன் முற்றுப்பெற்றுவிட்டதாக கருதவேண்டியுள்ளது.
நேரடியாக மோதிக்கொள்ளும் இருவரும் தமக்குரிய பிரச்சாரங்களில் எவற்றை சொன்னாலும் இதில் எவரது வெற்றியும் தமிழரசுக் கட்சியை வளர்க்க உதவப்போவதில்லை.
மாறாக உள்ளக நெருக்கடியை தீவிரமாக்கி பயணிக்குமே அன்றி ஒன்றுபட்டு முன்செல்வதற்கு வாய்ப்புக்கள் மிகக் குறைவே.
தமிழரசுக் கட்சி தனக்காக தேடியவற்றுக்கு அப்பால் புறச் சூழ்நிலைகளால் கடந்தகாலங்களில் பெற்றுக்கொண்ட மக்கள் அங்கீகாரத்தினை மீளவும் கேள்விக்குள்ளாக்கும் நிலையை உருவாக்கி தமக்கான பேரம்பேசும் சக்தியையும் தக்கவைக்கும் நிலையையும் குறைத்துக்கொள்ள முனைகின்றது.
இரகசிய வாக்கெடுப்பு என்பது உட்கட்சி விவகாரங்களுக்கு கையாளுவது என்பது ஒரு பொருத்தமற்ற கருவியாகும்.
உட்கட்சிக்குள் இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக்கொள்ள முடியாத ஒரு சூழ்நிலையில் தமிழரசுக் கட்சி இருந்துகொண்டு 84 அங்கீகரிக்கப்பட்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் அரசியல் கட்சிகளுடன் செயற்பட்டு “ஐக்கிய இலங்கை இணைப்பாட்சியின் அங்கமாக சுயநிர்ணய உரிமைக் கொள்கையின்படி ஒரு சுயாட்சித் தமிழரசும், ஒரு சுயாட்சி முஸ்லீம் அரசும் நிறுவி இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுடைய அரசியல், பொருளாதார, கலாசார விடுதலையைக் காண்பதை கட்சியின் நோக்கமாக” கொண்டு செயற்படப்போகின்றது என்பது சிந்திக்கவேண்டியதொரு விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் S P Thas அவரால் எழுதப்பட்டு, 16 January, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.