மாவீரர் தினம் தொடர்பாக இளங்குமரன் எம்பியின் பதிவு
ஒவ்வொரு மாவீரரும் தங்களுக்காக வாழ்வை அர்ப்பணிக்கவில்லை. ஒரு நல்ல தேசத்தையும், அனைவரும் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழக்கூடிய சமூகத்தையும் உருவாக்க வேண்டும் என்ற கனவுடனேயே அவர்கள் போராடினார்கள் என்பதை நினைவில் கொள்வோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
சமூகவலைத்தளமொன்றில் அவர் வெளியிட்ட பதிவிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாவீரரின் கனவு
மேலும் பதிவிட்டுள்ள அவர்,
அவர்களை என்றென்றும் நினைவுகூர்வோம்; அதேவேளை, போராட்டத்தில் தமது அன்புக்குரியவர்களை இழந்து பல்வேறு துயரங்களையும் வலிகளையும் சுமந்து வாழும் குடும்பங்களையும் அரவணைத்துப் பாதுகாப்போம்.
ஒவ்வொரு மாவீரரின் கனவாகவும் ஒரு நியாயமான, சமத்துவமான, மனிதநேயம் நிறைந்த சமூகமும், அச்சமின்றி நிம்மதியாக வாழக்கூடிய வாழ்க்கையும் இருந்திருக்க வேண்டும்.
கடந்த காலத்தின் வலி
எமது மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு, வரலாறு மற்றும் மரபுரிமைகளைப் பாதுகாத்து, அவற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வதும் எமது பொறுப்பாகும்.
கடந்த காலத்தின் வலிகளையும் இழப்புகளையும் மறந்துவிடாமல், அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் சம உரிமையுடனும் கண்ணியத்துடனும் வாழக்கூடிய நல்லதொரு நாட்டை உருவாக்குவோம்.
அந்தக் கனவுகளை நனவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கிப் பயணிப்போம். மாவீரர்களை நினைவுகூர்வோம். போரில் உயிரிழந்த அனைத்து மக்களையும் நினைவுகூர்வோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களை அரவணைப்போம்.
அமைதியும் சமத்துவமும் நீதியும் நிறைந்த எதிர்காலத்தை உருவாக்குவோம். நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாவீரர் தின அனுஷ்டிப்பில் மக்களின் நிலைப்பாடு
அத்துடன், மாவீரர் குடும்பங்களைச் சந்தித்து, அவர்களின் வாழ்வியல் பிரச்சினைகளையும் இளங்குமரன் எம்.பி கேட்டறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் வெளியிட்ட பதிவில்,
இன்றைய தினம் மாவீரர்களின் குடும்பங்களை அவர்களது வீடுகளுக்குச் சென்று நேரில் சந்தித்தேன். அவர்களுடன் உரையாடி, தற்போது எதிர்கொண்டுவரும் வாழ்வாதாரப் பிரச்சினைகள், குடும்பச் சவால்கள் மற்றும் தேவைகள் தொடர்பாகக் கேட்டறிந்துகொண்டேன். அவர்களின் துயரங்களையும் சிரமங்களையும் நேரில் அறிந்துகொள்வதுடன், என்னால் முடிந்த சிறிய உதவிகளையும் வழங்கினேன்.

ஒரு குடும்பத்தின் வலியையும் இழப்பையும் முழுமையாக ஈடுசெய்ய எந்த உதவியாலும் முடியாது. இருப்பினும், அவர்களுடன் நின்று, அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் பங்கெடுப்பது எமது மனிதநேயப் பொறுப்பாகும்.
நினைவுகூர்வது என்பது கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பதுடன் மட்டும் முடிந்துவிடக்கூடாது. இழப்புகளைச் சுமந்து வாழும் குடும்பங்களின் இன்றைய வாழ்க்கையிலும் துணையாக நிற்பதே உண்மையான மனிதநேயம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

YOU MAY LIKE THIS VIDEO
வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri