முன்னணி எழுத்தாளர் கசுன் மகேந்திரவின் கைது தொடர்பில் உயர்மட்ட விசாரணை ஆரம்பம்
முன்னணி எழுத்தாளர் கசுன் மகேந்திர ஹீனட்டிகல ( Kasun Mahendra Heenatigala ) கைது செய்யப்பட்டு, அதுருகிரிய பொலிஸாரால் தவறாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து, பதில் பொலிஸ் அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு-தெற்கு பொலிஸ் இற்கு பொறுப்பான துணை பொலிஸ் அதிபரின் மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமானமற்ற முறை
நடிகை மாதவி அந்தனியின் கணவரும், மறைந்த நடிகர் ஜக்சன் அந்தனியின் மருமகனுமான ஹீனட்டிகல, கடந்த வெள்ளிக்கிழமை மாலை, தமது வீட்டுக்கு அருகில் உள்ள மளிகைக் கடையில் இருந்து திரும்பி வரும்போது, அதுருகிரிய பொலிஸை சேர்ந்தவர்கள் எனக் கூறிய மூன்று பேரால் கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தின்போது, தம்மிடம் தேசிய அடையாள அட்டை இல்லை என்ற காரணத்திற்காக அதிகாரிகள் தன்னைக் கைது செய்ததாக கசுன் ஹீனட்டிகல தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர், பொலிஸார் தன்னை அதுருகிரிய பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், முச்சக்கர வண்டியில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்போது இரண்டு அதிகாரிகள் தனது கைகளை மனிதாபிமானமற்ற முறையில் பிடித்ததாகவும் கசுன் குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்
இதனையடுத்து, பொலிஸ் நிலையத்துக்கு வந்த தனது மனைவியையும், அதுருகிரிய பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பிற அதிகாரிகள் வார்த்தைகளால் திட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் தாம் விடுவிக்கப்பட்டதாகவும் கசுன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், சம்பவத்தின் போது பொலிஸ் அதிகாரிகள் சட்டத்தை மீறிச் செயல்பட்டார்களா என்பதைத் தீர்மானிக்க விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணையில் இது உண்மை என்று தீர்மானிக்கப்பட்டால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |