சர்வதேச மகளிர் தினத்தை புறக்கணித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் (VIDEO)
சர்வதேச மகளிர் தினத்தை புறக்கணித்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் காணாமல்போன தமது உறவுகளின் புகைப்படங்கள் மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலான கருத்துக்களை ஊடகங்களிற்கு இதன்போது வெளிப்படுத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி செய்திகள் - யது பாஸ்கரன்
வவுனியா
சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச மகளிர் தினம் எமக்கு கறுப்பு தினம், ”இராணுவத்தின் உறுதி மொழியையடுத்து ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே, வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும், அடக்காதே அடக்காதே பெண்களை அடக்காதே, சிதைக்காதே சிதைக்காதே பெண்களை சிதைக்காதே” போன்றவாறான கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
அடிமை சங்கிலியை உடைத்தெறிவோம், குடும்பங்களாக சரணடையும் போது அவர்களுடன் சேர்ந்து சரணடைந்த 29 ற்கு மேற்பட்ட குழந்தைகள் எங்கே? , யுத்தம் முடிவடைந்த பின் கையில் ஒப்படைக்கப்பட்ட பெண் பிள்ளைகளை என்ன செய்தீர்கள்? போன்றவாறான பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வவுனியா செய்திகள் - சதீஸ்
முல்லைத்தீவு
முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தில் மகளிர் தினத்தை துக்க தினமாக கடைபிடித்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்னறினை முல்லைத்தீவில் மேற்கொண்டுள்ளனர்.
இப்போராட்டமானது, முல்லைத்தீவு புனித இராஜப்பர் ஆலய முன்றலில் ஆரம்பமாகி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு நிறைவடைந்தது .
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்ட தொடர் ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் தருணத்தில் வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகளுக்கான நீதியை சர்வதேச சமூகம் விரைந்து வழங்க இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறு கோரியும், இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் அதனை துக்க தினமான மகளிர் தினமாக பிரகடனம் செய்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கபட்டது.
இப்போராட்டத்தில் ,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சமூக மட்ட பிரதிநிதிகள்,முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்டோர் கவனயீர்ப்பு போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் "உலகெல்லாம் பெண்கள் உரிமை பேசும் இந்நாளில் தெருவில் கிடந்து அழ வைத்திருக்கிறது. இந்த அரசு, எமது பிள்ளைகள் நீங்கள் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது ஒப்படைத்தோம்,கால அவகாசம் வேண்டாம் முறையான நீதி விசாரணையே வேண்டும், ஐ.நாவின் மனித உரிமை கூட்டத்தொடரில் இணை அனுசரணை வழங்கும் நாடுகள் இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்த ஆதரவு நல்க வேண்டும் ,
இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு மரணச்சான்றிதழ்தான் பதில் என்றால் கொலையாளி யார் ? உங்கள் இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்? கொடுப்பனவுகளை கொடுப்போம் என்று சொல்வது கொலை செய்த கதையை மறைக்கவே! பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே நீதியின்றியே இறந்துகொண்டிருக்கின்றோம்.,போன்ற வாசகங்களை தமிழ், ஆங்கிலம்,சிங்கள மொழியிலான நீண்ட பதாதைகளை கையில் ஏந்தி கண்ணீருடன் கவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை இராணுவம் ,இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் சிவில் உடை தரித்த பொலிஸார் புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு செய்திகள் - குமனன்
திருகோணமலை
சர்வதேச மகளிர் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் நடை பவனியொன்று முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டமானது திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமான, குறித்த நடை பவனியானது கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டதுடன், ஆளுனர் செயலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த குறித்த சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா, கடந்த 5 வருட காலமாக தம்மால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு இன்னமும் விடிவு கிடைக்காத நிலையில் தாம் தமது பிள்ளைகளை வீதியில் இறங்கி தேடிவருவதாக தெரிவித்தார்.
உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை அற்றவர்களாக இன்று வீதியில் இறங்கி போராடி கொண்டிருக்கும் பெண்களை இன்று சர்வதேச மகளிர் தினத்திலாவது சர்வதேசம் உற்றுப்பார்க்கவேண்டும்.தமக்கு ஜனநாயக பொறி முறையிலான நீதி ஒன்றே அவசியம் அதற்கு சர்வதேசம் முன் நின்று அதனை பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தார்.
பயங்கரவாத தடை சட்டத்தினை முன்னிலைப்படுத்தி கைது செய்யப்பட்ட தமது உறவுகளை இந்த அரசாங்கமானது இன்னமும் விடுதலை செய்யவில்லை.அவர்களது முடிவு தெரிய வரும் வரை தாம் இப்போது முன்னெடுத்துச் செல்லும் போராட்டத்தினை கைவிடப் போவதில்லை என குறிப்பிட்டார்.
திருகோணமலை செய்தி - அப்துல் சலாம் யாசீம்





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
