10 மணித்தியாலத்திற்குள் தீர்வில்லையேல் போராட்டம் - கிராம மக்கள் காலக்கெடு
திருநாவற்குளம் பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு எதிர்வரும் 10 மணித்தியாலங்களில் பாதுகாப்பு ஊழியர் ஒருவரை நியமிக்கத்தவறின், வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை குறித்த கடவையில் இடம்பெற்ற புகையிரதவிபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், திருநாவற்குளம் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பணியில் ஈடுபட்டு வந்த காவலாளிக்கு பொலிஸாரால் வழங்கப்படும் கொடுப்பனவு வழங்கப்படாத நிலையில் அவர்கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் இருந்து பணியில் ஈடுபடுவதை நிறுத்தியுள்ளார்.
தற்போது பலமாதங்களாக குறித்த கடவைக்கு பாதுகாப்பு ஊழியர் ஒருவர் நிறுத்தப்படவில்லை. அந்த கடவை நகரை அண்டி இருக்கின்றது.
தினமும் அதிகமான மக்கள் அதனைப்பயன்படுத்தி வருவதுடன், புகையிரதம் வருவதை இலகுவில் அறிந்துகொள்ள முடியாத அபாயகரமான ஒரு பகுதியாக அது இருக்கின்றது.
குறித்த பாதுகாப்பற்ற கடவைக்கு ஊழியர் ஒருவரை நியமிக்குமாறு நாம் பலமுறை கோரிக்கையினை விடுத்தும் அது பொலிசாராலும், புகையிரத திணைக்களத்தினாலும் நிறைவேற்றப்படாமல் தட்டிக்கழிக்கப்பட்டு வருகின்றது.
எனவே இன்று காலையில் இருந்து பத்து மணித்தியாலங்கள் கால அவகாசத்தினை நாம் பொலிசாருக்கு வழங்குகின்றோம்.
அதற்குள் குறித்த கடவைக்கு பாதுகாப்பு ஊழியர்
ஒருவர் நியமிக்கப்படாது விடின் பொதுமக்கள் அனைவரும் வீதியில் இறங்கி
போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
