கையளிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? நீதி அமைச்சரிடன் கேள்வி எழுப்பும் மக்கள்
உயிரோடில்லாதவர்களை கேட்டால் எப்படி தருவது என்று நீதி அமைச்சர் கேட்கின்றார் எனில் கையளிக்கப்பட்ட மது உறவுகளிற்கு என்ன நடந்தது என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க உப செயலாளர் ரத்தீஸ்வரன் கவிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
கிளிநொச்சியில் எதரிவரும் 20ம் திகதி இடம்பெறவுள்ள போராட்ட ஏற்பாடுகள் தொடர்பிலான ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பகல் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது குடும்பங்களின் சங்க தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது எதிர்வரும் 20ம் திகதி காலை 10 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்படவுள்ள பேரணி டிப்போ சந்தியில் நிறைவடையவுள்ளதாகவும், அதில் அனைத்து தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
நீதி அமைச்சர் தெரிவித்த கருத்தானது கலங்க வைத்துள்ளதாகவும், 11 ஆண்டுகளிற்கு மேலாக எமது உறவுகளை தேடி போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் எமது உறவுகளிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் சர்வதேசம் நீதியை பெற்றுத்தர வேண்டும் என்பதை விலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் அனைவரும் பங்கு கொண்டு ஆதரவினை வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இதேவேளை அங்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்க வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க உப செயலாளர் ரத்தீஸ்வரன் கவிதா
குறிப்பிடுகையில்,
இராணுவத்தினர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களை சரணடையுமாறும், விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்வதாகவும் தெரிவித்த நிலையில் எனது கணவர் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.
அவர் மாத்திரமல்லாது எனது கண் முன்பாக மூன்று பேருந்துகளில் இராணுவத்தினர் பலரை ஏற்றி சென்றனர். இந்த நிலையில் நீதி அமைச்சர் எமது உறவுகள் உயிருடன் இல்லை என தெரிவித்துள்ளார்.
அப்படியாயின் எமது உறவுகளிற்கு என்ன நடந்தது? அவர்களை கொலை செய்துவிட்டீர்களா? இலங்கை அரசாங்கத்திடம் எமக்க நம்பிக்கை இல்லை.
அதனால்தான் நாங்கள் சர்வதேசத்திடம் நீதியை கோரி நிக்கின்றோம். எதிர்வரும் 20ம் திகதி இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு அனைத்த பொது அமைப்புக்கள், சங்கங்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் பங்குகொண்டு எமக்க ஆதரவினை தருவதன் ஊடாக சர்வதேசத்திடம் நீதியை பெற்றுத்தருவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.