யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால்? எதிர்வுகூறப்பட்டுள்ள விடயம்
யாழ். மாநகர சபை வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் பெருந்தேசியவாதத்தினுடைய நிகழ்ச்சி நிரல் இங்கே மேடையேறுவதற்கான வாய்ப்புக்கள் அமையுமென சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இணைப்பாளர் சி.ஆ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுவது தற்பொழுது வழக்கமாகிவிட்டது. வவுனியா வடக்கு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டது.
அபாய இடங்களிலே, குறிப்பாக சிங்கள தரப்புக்கு கை மாறக்கூடியவகையில் இருக்கின்ற பிரதேச சபைகளிலே தமிழ் கட்சிகள் ஒருங்கிணைந்து கவனமாக செயற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களோ அந்த பொறுப்பை உதாசீனம் செய்து இருக்கின்றார்கள் என்றே கூற வேண்டி இருக்கின்றது.
நாளைய தினம் யாழ்ப்பாண மாநகர சபையின் வரவு-செலவுத்திட்டம் விவாதத்துக்கு வர இருக்கின்றது. அந்த வரவு செலவுத் திட்டத்தையும் தோற்கடிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
கட்சி மற்றும் அரசியல் ரீதியான முரண்பாடுகளை மாநகரசபை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு கட்சிகள் முயன்று கொண்டிருக்கின்றன.
இந்த வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமாக இருந்தால் பல பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மாநகர சபையை கலையக் கூடிய ஒரு அபாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மாநகர சபை சட்டத்தின் படி இரண்டு தடவைகள் மேயர் பதவி நீக்கப்பட்டால் மாநகரசபை கலைய வேண்டிய ஒரு அபாயம் இருக்கின்றது.
இந்த அபாயம் பற்றி இந்த கட்சிகளுக்கு தெரியாது என்று கூறிவிட முடியாது. ஆனால் அவர்கள் தங்களுடைய கட்சி அரசியலுக்கு ஆக இந்த செயற்பாட்டை செய்கின்றார்கள்.
கலைக்கப்பட்ட மாநகர சபை, மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டால் தமிழ் மக்கள் கை விலகுவதோடு ஏற்கனவே வடக்கை நோக்கி பெரும் தேசியவாதம் தன்னுடைய நிகழ்ச்சி நிரலை நடத்துவதற்கு முயற்சிக்கின்ற செயற்பாடு மேலும் துரிதம் அடையக்கூடிய அபாயம் ஏற்படும்.
மாநகர சபையின் செயற்பாடுகளில் பல தடங்கல்கள் ஏற்படும். அதனுடைய நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மட்டுமல்ல அபிவிருத்தி செயற்பாடுகள் பாதிக்கப்படுகின்ற சூழல் உருவாகும்.
யாழ். மாநகரசபை சமூக முதலீட்டுடன் தமிழ் மக்களுடைய மரபுரிமை சொத்துக்களை பாதுகாக்கின்ற செயற்பாட்டை ஆரம்பித்திருக்கின்றது.
தமிழ் தொழிலதிபர்களின் உதவிகளை பெற்று இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. ஆரியகுள செயற்பாடு இவ்வாறே முன்னெடுக்கப்பட்டது. அதனுடைய வரலாற்று அம்சங்கள் அங்கே நினைவுக்கல்லாக அங்கே பொறிக்கப்பட்டுள்ளது.
மாநகர சபை வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் பெருந்தேசியவாதத்தினுடைய நிகழ்ச்சி நிரல் இங்கே மேடையேறுவதற்கான வாய்ப்புக்கள் அமையும்.
ஆகவே,அரசியல் கட்சிகளிடம் நாங்கள் வினயமாக கேட்டுக் கொள்வது தமிழ் தேசியத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளிலே உங்கள் கட்சி அரசியலை செய்ய வேண்டாம்.
யாழ். மாநகரசபை தமிழ் மக்களின் பொதுச் சொத்து. அந்த மாநகர சபையை அனைவரும் இணைந்து சுமுகமாக செயற்படுத்துவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். இதனை சுமுகமாக செய்ய வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு.
அந்த பொறுப்பில் இருந்து யாரும் விலகிவிட முடியாது. வரவு செலவுத்திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமாக இருந்தால் அந்தத் திருத்தத்தை கொண்டு வாருங்கள். அதனை பேசுங்கள். அதற்கு சில வேளைகளில் முதல்வர் உடன்படாவிட்டால் மக்களிடம் கொண்டு வாருங்கள். அது சரியானதென்றால் அதில் திருத்தங்களைச் செய்ய மக்கள் அழுத்தங்களை கொடுப்பர்.
மாநகரசபை ஒழுங்காக செயற்படுவதற்கு ஒரு சூழலை உருவாக்குங்கள். அதை விடுத்து கட்சி முரண்பாடு காரணமாக மாநகர சபையை செயற்பாடுகளை முடக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
பதின்மூன்றாம் திருத்தம் தொடர்பாக கேள்வி எழுப்பிய பொழுது,
13ஆம் திருத்தத்தை அரசியல் தீர்வாகவோ அல்லது முதற்படியாகவோ என அரசியல் கட்சிகள் கூறுவதை விடுத்து, இலங்கை அரசாங்கம் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நல்லெண்ண அடிப்படையில் அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் கட்சிகள் முன்வைக்க வேண்டும்.
இந்தியாவிடம் தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை அரசியல் கட்சிகள் உறுதியாக வலியுறுத்த வேண்டும் என பதிலளித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
