மன்னாரில் தொற்றுக்குள்ளாகிய வர்த்தகருடன் தொடர்பிலிருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை
மன்னார் அரச பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள ஆடை விற்பனை நிலையத்தினை நடத்தி வருகின்ற வர்த்தகர் ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் புதிய பேருந்து தரிப்பிட பகுதியில் கடந்த 6ஆம் திகதி மேற்கொள்ளக்கட்ட 200 நபர்களுக்கான எழுமாறான பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 2 நபர்களுக்குத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, ஏனைய 198 நபர்களுக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.
தொற்றுக்கு உள்ளானவர்களில் ஒருவர் இலங்கை அரச போக்குவரத்து சேவையின் புத்தளம் சாலைக்கான நிக்கரவெட்டிய பகுதியைச் சேர்ந்த நடத்துநர் ஆவர்.
மன்னார், புத்தளம் அரச போக்குவரத்து சேவையின் நடத்துனரான குறித்த நபருக்குத் தொற்று உள்ளமை தெரிய வந்துள்ளது.
மற்றைய நபர் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த மன்னார் அரச பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள ஆடை விற்பனை நிலையத்தினை நடத்தி வருகின்ற வர்த்தகர் ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் அடையாளம் காணப்பட்டு சுகாதாரத் துறையினரினால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த மன்னார் அரச பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள ஆடை விற்பனை நிலையத்தினை நடத்தி வருகின்ற வர்த்தகர் மன்னார், உப்புக்குளம் பகுதியில் வசித்து வந்ததினால் அவருடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளைச் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
உப்புக்குளம் கிராமத்தை அண்மித்த மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை மற்றும் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை ஆகிய இரு பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்பட்டு நாளை மீண்டும் வழமை போல் இயங்கும்.
ஏற்கனவே மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் 5 நபர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடர்புடைய 113 நபர்கள் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் அடுத்த வாரம் அளவில் விடுவிக்கப்படுவார்கள். தனிமைப்படுத்தப்பட்ட 113 நபர்களில் 70 மாணவர்களும் உள்ளனர். அவர்களும் அடுத்த வாரம் பாடசாலை செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
ஆடை விற்பனை நிலையத்திற்குச் சென்ற, அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் உடனடியாக பொதுச் சுகாதார பரிசோதகர்களுடன் தொடர்பு கொண்டு தங்களை உடனடியாக பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். குறித்த ஆடை விற்பனை நிலையத்தை நடத்தி வருகின்றவர் எங்களுக்கு,
குறிப்பாகச் சுகாதாரத் துறையினருக்கு வழங்கிய பூரண ஒத்துழைப்பின் காரணமாக அவரை அடையாளம் கண்டு அவருடன் தொடர்பில் உள்ளவர்களைப் பாதுகாப்பதற்கு உதவியாக அமைந்துள்ளது. எனவே அச்சம் கொள்ளாது பி.சி.ஆர்.பரிசோதனைக்கு ஒத்துழையுங்கள்.
பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் தங்களையும், நமது குடும்பத்தையும், அயலவர்களையும் மாவட்டத்தையும், சமூகத்தையும் பாதுகாக்க சுகாதாரத் துறையினருக்கு ஒத்துழைத்து ஆடை விற்பனை நிலையத்திற்குச் சென்ற, அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.