அமெரிக்க அறிக்கையில் வர்த்தகம் செய்வதற்கு சவாலான இடமாக இலங்கை அடையாளம்
அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின், 2021, முதலீட்டு சாத்திய அறிக்கையில், வர்த்தகம் செய்வதற்கான ஒரு சவாலான இடமாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அதிக பரிவர்த்தனை செலவுகள், கணிக்க முடியாத பொருளாதாரக் கொள்கை, அரசாங்க சேவைகளின் திறனற்ற விநியோகம் மற்றும் கொள்முதல் நடைமுறைகள் இதற்கான காரணங்கள் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் ஒப்பந்த நிராகரிப்பு, அல்லது நியாயமற்ற பறிமுதல் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் என்பவை தொடர்பில் முதலீட்டாளர்கள் கரிசனைக்கொண்டுள்ளதாக அமெரிக்க அறிக்கை கூறுகிறது.
இலங்கையில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பொதுத்துறை ஊழல் ஒரு குறிப்பிடத்தக்க சவால் என்பதுடன் முதலீட்டிற்கு ஒரு தடை என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இலங்கையில் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு, பொதுவாக போதுமான சட்டங்களும் விதிகளும் உள்ளன.
எனினும் அவற்றின் அமுலாக்கம் பலவீனமானது. வரலாற்று ரீதியாக, முக்கிய அரசியல் கட்சிகள் அரசியல் பதவிகளைப் பெற்றபின் அல்லது இழந்த பின்னர் ஒருவருக்கொருவர் எதிராக ஊழல் வழக்குகளைத் தொடரவில்லை என்றும் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் முதலீட்டு சாத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.