திடீர் தொழிநுட்பகோளாறு! மறுஅறிவித்தல் வரை ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் இடைநிறுத்தம்
புதிய இணைப்பு
ஆட்பதிவுத்திணைக்களத்தின் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொது மக்கள் சேவையினையும் நாளை (27) முதல் மறு அறிவித்தல் வரும் வரை இடை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (26) பிற்பகல் 1.30 மணியளவில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழிநுட்பக் கோளாறு காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணினி அமைப்பு மீண்டும் வழமைக்குத் திரும்பும் வரை அனைத்துச் சேவைகளும் இடம்பெறாது என திணைக்களம் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
ஆட்பதிவு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பு தொழிநுட்ப கோளாறு காரணமாக மீண்டும் செயலிழந்துள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
குறித்த தரவுக்கட்டமைப்பை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திடீரென ஏற்பட்ட தொழிநுட்பகோளாறு
இதன் காரணமாக, தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து சேவைகளும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 23ஆம் திகதி ஆட்பதிவு திணைக்களத்தின் கணினி அமைப்பில் திடீரென தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, அமைப்பினை சரிசெய்த பிறகு, 24ஆம் திகதி காலை 11 மணி முதல் தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து சேவைகளையும் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கணினி அமைப்பு இன்று (26) மீண்டும் செயலிழந்துள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.