போதைப்பொருள் வர்த்தகர்களிடம் அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை
சிறுவர்களுக்கு ஐஸ் போதைப்பொருளை வழங்குவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு வர்த்தகர்களிடம் கேட்டுக் கொள்வதாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவதால் அவர்களது எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படுகிறது. மேலும் உடல் ஆரோக்கியம் கெடுவதினால் பல்வேறு நோய்களும் ஏற்படுகின்றன.
ஆயுள் காலமும் குறைகிறது. எனவே இத்தகைய பாவச் செயலிலிருந்து விலகி நிற்குமாறு வியாபாரிகளிடம் வேண்டுகோள் விடுப்பதாக குணசிறி மேலும் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஐஸ் போதைப்பொருளை விநியோகிக்கின்ற வர்த்தகர்களை உடன் கைது செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஐஸ் போதைப்பொருள் மிகவும் தாக்கம் கூடிய
இரசாயன பொருளாகும். இது உடலின் அவயங்களை செயலிழக்கச் செய்யும். மேலும்
உடல் செயற்பாட்டை பெரிதும் பாதிக்கக் கூடியதாகும்.