இலங்கையை வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றுள்ளது.
லீக் சுற்றின் 4ஆவது போட்டியானது இன்றையதினம் டெல்லியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
சதம் கடந்த வீரர்கள்
இதையடுத்து தென்ஆப்பிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய தென்ஆப்பிரிக்க அணி ஓட்டமழை பொழிந்தது.
குயிண்டன் டி காக் (100), வாண்டர் உசேன் (108) ஏய்டென் மார்கரம் (106) ஆகியோர் சதம் கடந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 428 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி
இதையடுத்து 429 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 76 ஓட்டங்களையும், சரித் அசலங்கா 79 ஓட்டங்களையும், தசுன் ஷனகா 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் 44.5 ஓவர்கள் முடிவில் 326 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.