கடும் சிக்கலை எதிர்கொள்ளும் இலங்கை கிரிக்கெட்.. ஜனாதிபதி அநுரவுக்கு விடுக்கப்பட்டுள்ள காலக்கெடு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை ஒரு கடுமையான நிபந்தனையை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, இலங்கை கிரிக்கெட்டிற்கான தேர்தல்களை ஜூலை 31ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ நடத்துமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் இந்த பணியை முடிக்க அதிகாரிகள் தவறினால், 2023ஆம் ஆண்டில் நடந்தது போல மீண்டும் இலங்கை கிரிக்கெட் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் கடுமையான அபாயத்தை எதிர்கொள்ளும் என்றும் சர்வதேச கிரிக்கெட் சபை மேலும் வலியுறுத்தியுள்ளது.
அரசியல் மயமாக்கல்..
கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதிக்கும் சர்வதேச கிரிக்கெட் சபைத் தலைவர் ஜெய் ஷாவுக்கும் இடையே நடைபெற்ற ஒரு சிறப்பு சந்திப்பின் போது இந்த விவகாரங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இலங்கை கிரிக்கெட் சபையை அரசியல்மயமாக்குவது குறித்து சபையின் மீது தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள ஜெய் ஷா, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரன் விக்ரமரத்ன தலைமையிலான புதிய இடைக்காலக் குழுவின் மூலம் கிரிக்கெட் சபையின் நிர்வாகம் குறித்தும் இந்தக் கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தியுள்ளன.
வீரர்களிடமிருந்து எழுந்த முறைப்பாடுகள் மற்றும் விமர்சனங்கள் காரணமாக ஜனாதிபதி விடுத்த அறிவிப்பை தொடர்ந்து, முன்னாள் கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வாவும் செயற்குழுவும் கடந்த ஏப்ரல் மாதம் பதவி விலகினர்.
இலங்கை கிரிக்கெட் நீக்கம்..
அதனைத் தொடர்ந்து, விளையாட்டு அமைச்சு தற்காலிகமாக கிரிக்கெட்டின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டது.

மேலும், கட்டமைப்பு சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவும் புதிய அரசியலமைப்பை வரைவு செய்யவும் குமார் சங்கக்கார மற்றும் ரொஷன் மகாநாம போன்ற முன்னாள் தேசிய வீரர்களைக் கொண்ட ஒரு மாற்றக் குழு நியமிக்கப்பட்டது.
இருப்பினும், கிரிக்கெட் அமைப்புகள் அரசியல் செல்வாக்கிலிருந்து சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற தனது கொள்கையை சர்வதேச கிரிக்கெட் சபை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
2023 உலகக் கோப்பையில் ஏற்பட்ட மோசமான தோல்விக்குப் பிறகு அப்போதைய அரசாங்கம் கிரிக்கெட் சபையை கலைத்தது.
மேலும், அரசாங்கத்தின் தலையீட்டின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கையின் உறுப்புரிமையை இடைநீக்கம் செய்தது.
2024 ஜனவரியில் தடை நீக்கப்பட்ட போதிலும் தேர்தல்கள் மேலும் தாமதமானால் இலங்கை மீண்டும் இதேபோன்ற ஒரு கதியை சந்திக்க நேரிடும் என்று சர்வதேச கிரிக்கெட் சபை கடுமையாக எச்சரித்துள்ளது.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri