தமிழ் மக்களுக்கு உறவுப்பாலமான ஐ.பி.சி தமிழ்! மூத்த ஊடகவியலாளர் பாராட்டு
தாயக செய்திகளை, யுத்தகள நிலவரங்களையும்,விடுதலைப்போராட்ட அரசியல் கள நிலவரங்களையும் ஐரோப்பிய தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல உறவுப்பாலம் என்ற ஒரு மணிநேர சிற்றலை ஒலிபரப்பு ஊடாகவும் தந்த பெருமை ஐ.பி.சி தமிழ் வானொலியை சாரும் என முத்த ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.சி தமிழ் வானொலி இன்று 25ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடி வரும் நிலையில்,பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஐ.பி.சி தமிழ் வானொலியின் 25ஆவது ஆண்டு நிறைவையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழர்களின் இல்லங்களில் 24மணி நேரமும் ஒலிக்க தொடங்கிய வானொலி
ஐ.பி.சி தமிழ் வானொலியின் 25ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று யாழ். ஐ.பி.சி கலையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் இன்று கிடைத்தது. இதனை ஏற்பாடு செய்து தந்த ஐ.பி.சி தமிழ் யாழ். கலையகத்தினருக்கும், ஐ.பி.சி நிறைவேற்றுப்பணிப்பாளர் நிராஜ் டேவிட் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
ஐ.பி.சி தமிழ் வானொலி யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் 1997ஆம் ஆண்டு யூன் 09ஆம் திகதி லண்டனில் இருந்து ஐரோப்பிய தமிழர்களின் இல்லங்களில் 24மணி நேரமும் ஒலிக்க தொடங்கியது.
தமிழ் மக்களுக்கு உறவுப்பாலம்
தாயக செய்திகளை, யுத்தகள நிலவரங்களையும்,விடுதலைப்போராட்ட அரசியல் கள நிலவரங்களையும் ஐரோப்பிய தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல உறவுப்பாலம் என்ற ஒரு மணிநேர சிற்றலை ஒலிபரப்பு ஊடாகவும் தந்த பெருமை ஐ.பி.சி தமிழ் வானொலியை சாரும்.
ஐ.பி.சி தமிழ் வானொலியின் தந்தையான மதிப்புக்குரிய தாஸீஸியஸ் அவர்கள் உட்பட இந்த வானொலியின் வளர்ச்சிக்காக பணியாற்றிய பலரை நான் அறிவேன். அவர்கள் அனைவரும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள்.
தற்போது 25 வருடங்களை கடந்து வந்திருக்கின்ற இந்த வானொலியின் தற்போதைய நிர்வாகத்தினரும் பணியாளர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். யாழ். கலையகத்தை சென்று பார்த்த போது துடிப்புடன் பணியாற்றிக்கொண்டிருக்கும் இளம் ஊடகவியலாளர்கள் ஒலி ஒளிபரப்பாளர்களை கண்டு மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைந்தேன்.
குவியும் பாராட்டுக்கள்
யாழ். நகரில் சிறப்பான கலையகத்தை அமைத்திருக்கும் இந்நிறுவன தலைவர் கந்தையா பாஸ்கரன், நிறைவேற்றுப்பணிப்பாளர் நிராஜ் டேவிட் ஆகியோருக்கு எனது பாராட்டுக்கள்.
யாழ் கலையகத்தினருக்கும் எனது பாராட்டுக்கள்.
ஐ.பி.சி கலையகத்திற்குள் பிரவேசித்த போது என்னோடு பயணித்த பலர் என் கண் முன் நின்றார்கள்.
எனது நண்பர்களான நிமலராசன், நடேசன், சிவராம், மற்றும் எனது ஆசான் கோபு ஐயா ஆகியோரின் படங்களின் முன் ஒரு கணம் நிலைத்து நின்றேன்.
ஐ.பி.சி. தமிழ் யாழ் கலையகத்தினரின் அன்பான உபசரிப்பிற்கு பல கோடி நன்றிகள் என்றும் தெரிவித்துள்ளார்.



