திடீரென அநுர பக்கம் தாவிய மகிந்தவிற்கு நெருக்கமான பௌத்த தேரர்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பிற்கு மிகவும் நெருக்கமாக செயல்பட்டு வந்த சர்ச்சைக்குரிய அம்பிட்டியே சுமன ரதன தேரர் ஜனாதிபதி அநுரவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.
மிக நீண்ட காலமாக மகிந்த ராஜபக்ச தரப்பிற்கு மிகுந்த விசுவாசத்துடன் செயற்பட்டு வந்த ஒரு பிரதான பௌத்தப்பிக்குவாக அம்பிட்டியே சுமன ரதன தேரர் கருதப்படுகின்றார்.
இவ்வாறான ஒரு பின்னணியில் தற்பொழுது தான் மகிந்த தரப்பிலிருந்து விலகி அநுர தரப்பினை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.
வெளியான காணொளி
கிழக்கு மாகாணத்திற்கு இன்றைய தினம் ஜனாதிபதி மேற்கொண்ட விஜயத்தின் போது அவர் அம்பிடியே சுமன ரதன தேரரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பினை தொடர்ந்து வெளியிட்ட காணொளி ஒன்றில் தான் அநுர தரப்பினை ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியுடன் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் தோல்வியடைந்தால் தாம் ஒரு தீர்மானமான அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பேன் என முன்பே தெரிவித்திருந்ததாக தேரர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி அநுர மட்டக்களப்பிற்கு வந்திருந்த போது அவரைச் சந்திக்க முயன்றதாகவும், அத்தகைய வாய்ப்பு கிடைக்கும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள்
தாம் முன்பாக வெளியிட்டிருந்த செய்தியைத் தொடர்ந்து, மூத்த பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் சந்திப்பை ஏற்பாடு செய்ததாகவும், அதன் மூலம் ஜனாதிபதியுடன் நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணம் தொடர்பான பல பிரச்சினைகள் மற்றும் கரிசனைகளைஅந்தச் சந்திப்பில் முன்வைத்ததாக அம்பிட்டிய சுமன ரதன தேரர் தெரிவித்துள்ளார். அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தம்முடன் உரையாட வாய்ப்பு வழங்கியதற்காக ஜனாதிபதிக்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலும், ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரையில் அவருக்கு “அதிகபட்ச ஆதரவை” வழங்கத் தயாராக இருப்பதாகவும், “ராஜபக்ச நிகாய” அல்லது ராஜபக்ச தரப்பிலிருந்து தாம் விலகிச் செல்வதாகவும் தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டை நேர்மறை திசையில் முன்னேற்ற ஜனாதிபதி மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கும் தாம் ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாக அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பௌத்த தேரர் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில் ஜனாதிபதி அநுர அவருடன் இந்த சந்திப்பினை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.