எனக்கு எதிரிகள் இல்லை! 220 இலட்சம் பேரும் எனது நண்பர்களே : சஜித்
இந்த நாட்டில் எனக்கு எதிரிகள் இல்லை. 220 இலட்சம் பேரும் எனது நண்பர்களே என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 166 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கம்பஹா, அத்தனகல்ல, ஊராபொல மகா வித்தியாலயத்துக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (27) நடைபெற்றது.
பிரதேச மக்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
வளமான கல்விக்கு உதவிக்கரம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலை நிகழ்வொன்றில் நான் நண்பர்களே என விழித்தேன். இந்த மாணவர்கள் கூட எதிரிகள் அல்ல, நண்பர்கள். நட்பின் கரமே நீட்டப்பட்டது.
பிள்ளைகளுக்கான நிலைபேறான வளமான கல்விக்கு உதவிக்கரம் நீட்டவே பாடசாலைகளில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நண்பர்களே என விழித்துப் பேசுவதையும் சிலர் விமர்சித்து வருகின்றனர். இனம், மதம், வர்க்கம், கட்சி, சாதி வேறுபாடின்றி 220 இலட்சம் மக்களும் எனது நண்பர்களே.
வாக்குகளைச் சுருட்டிக்கொள்வதற்காகவே சிங்களம் மட்டும், தமிழ் மட்டும் எனக் கூறி பிரிவினைகளைத் தோற்றுவிக்க முனைகின்றனர். இந்தப் பொய்களை நம்பி ஏமாந்து விட வேண்டாம்.
பொய்யான தீவிரவாத அரசியலை முன்னிலைப்படுத்தி, பாடசாலை, பல்கலைக்கழகங்கள், நூலகங்களை எரித்த காலம் இருந்தது. மீண்டும் இத்தகையதொரு காலம் எமக்குத் தேவையில்லை என குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில், பாடசாலையின் இதர தேவைகளைக்காக ஒரு இலட்சம் ரூபா நிதியை பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரிடம் நன்கொடையாக எதிர்க்கட்சித் தலைவர் வழங்கி வைத்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |