நான் கடும் மன அழுத்தத்தில் இருக்கின்றேன்! - இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பகிரங்கம்
நாட்டின் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், தான் கடும் மன அழுத்தத்தில் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எவ்வாறான பிரேரணைகள் முன்வைக்கப்பட்டாலும் சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைப் பெறுவதற்கு செல்லப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது பெரும் ஆபத்து எனவும், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லாமலேயே சமாளிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடனை வேறுவிதமாக நிர்வகித்தால் பிரச்சினை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன்களை பெற்றுக்கொள்வது அர்த்தமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதன் மூலம் முதலீட்டாளர்களோ சுற்றுலா பயணிகளோ இலங்கைக்கு வரமாட்டார்கள் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றால், வட்டி விகிதத்தை உயர்த்துவது, ரூபாயை மிதக்க அனுமதிப்பது, நாட்டின் வளங்களை விற்பது, ஊதியத்தை குறைப்பது போன்ற நிபந்தனைகளை விதிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் தான் மன அழுத்தத்தில் இருப்பதாகவும், மன அழுத்தத்தை மகிழ்ச்சியுடன் சகித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்



