பெருமளவான பக்தர்களின் பங்கேற்புடன் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் நிறைவு(Video)
வரலாற்று பிரசித்தி பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்றைய தினம் (04.03.2023) நிறைவுபெற்றுள்ளது.
யாழ்-நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா நேற்று (03.03.2023) பிற்பகல் 4 மணிக்கு கொடியேற்றத்தோடு ஆரம்பமாகி தொடர்ந்து, நேற்று இரவு விசேட ஆராதனை இடம்பெற்று சுற்றுப்பிரகாரமும் இடம்பெற்றது.
திருவிழாவின் இரண்டாவது நாளான இன்று (04.03.2023) காலை 6 மணிக்கு திருச்செபமாலை இடம்பெற்று, 6.30 மணிக்கு ஆயர் மற்றும் அருட்தந்தையர்கள் வரவேற்கப்பட்டு 7 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகளவான பக்தர்கள்
இன்றைய திருவிழா திருப்பலி கொழும்பு மறை மாவட்டத்தின் துணை ஆயர் அருட்தந்தை அண்ரன் தில்லைநாயகம் மற்றும் யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இவ்வருடம் கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் 2800 இலங்கை பக்தர்களும், 2100 இந்திய பக்கர்களும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றுநோய் காரணமாக கடந்த வருட திருவிழாவில் மட்டுப்படுத்தப்பட்டவர்களே அனுமதிகப்பட்டிருந்தால் இவ்வருடத்திற்கான திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் பதிப்பு
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் பெருமளவான இலங்கை, இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் நேற்று (03.03.2023) மாலை 4 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
இம்முறை வருடாந்த கச்சதீவு உற்சவத்திற்கு இலங்கை கடற்படை, இந்திய துணை தூதுவராலயம், இலங்கை வெளிவிவகார அமைச்சு ஆகியன முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளன.
அந்தோனியார் ஆலயத்தில் புனித ஆராதனை மற்றும் தேவாலயத்தை சுற்றி சிலுவை பாதை நடைபெற்றுள்ளதுடன், இன்று (04.03.2023) காலை 7 மணியளவில் யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
பெருமளவான பக்தர்களின் பங்கேற்பு
கோவிட் தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக யாத்ரீகர்களை இலங்கை அரசு அனுமதிக்கவில்லை.
இதேவேளை நீண்ட காலத்தின் பின் இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கப்பல்களில் புறப்பட்டுச் சென்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி இந்தியாவிலிருந்து 60 இயந்திர மற்றும் 11 நாட்டுப் படகுகள் உட்பட 71 படகுகளில் பக்தர்கள், இந்திய அதிகாரிகள், வியாபாரிகள் என மொத்தமாக 5,100 பேர் கச்சதீவு திருவிழாவில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இலங்கை அதிகாரிகள் மற்றும் இரு நாடுகளைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார்கள் உட்பட 8000 பேர் இரண்டு நாள் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

மணிவிழாவிற்கு மாலையுடன் உட்கார்ந்த குணசேகரனுக்கு விழுந்த பெரிய இடி.. கெத்து காட்டிய ஜனனி, எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
