பற்பல பண்பாடுகளில் ஒத்துவாழும் அமைதியான சமூகங்களே மனித வளர்ச்சிக்கு உகந்தது!
பற்பல பண்பாடுகளில் ஒத்துவாழும் அமைதியான சமூகங்களே மனித வளர்ச்சிக்கு உகந்தது என மனித இன வரலாறு மட்டுமல்ல, இந்நாட்டு வரலாறும் நமக்கு பாடம் புகட்டியுள்ளது என பெண்கள் அமைப்புகள் மற்றும் பெண்கள் வலயமைப்புகள் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஒவ்வொரு சாதி, இன, மத குழுக்களும் தங்களது உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதை உறுதிப்படுத்துவதுடன் ஏனைய சமூகத்தவரும் இதே விதமாக அனைத்து உரிமைகளையும் அனுபவிப்பதை உறுதிப்படுத்தும் போதுதான் ஒட்டுமொத்த மானுட மேம்பாடு சாத்தியமாகும்.
கடந்த சில வாரங்களாக திருகோணமலை ஸ்ரீ சண்முகா மகளீர் கல்லூரிக்கு ஆசிரியர் ஒருவர் அபாயா ஆடையினை அணிந்து வந்தமை தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து ஊடக, சமூக வலைத்தளங்களில் பெண்களின் உடல், ஆடை, பண்பாடு, இனம், மதம் தொடர்பாக பெண்கள் மீதான வெறுப்பு பேச்சுக்ககளும் விமர்சனங்களும் வெளி வந்துகொண்டிருகின்றன.
இது முதல் தடவை அல்ல. இப் பிரச்சினைகள் அனைத்து இனப் பெண்கள் மாணவியரின் கல்விக்கும், சிந்தனைகளுக்கும், மேம்பாட்டுக்கும், பெரும் இடையூறாக அமைந்துள்ளன.
பெண்களுக்கு எதிராக விடுக்கப்படும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் எமது இளம் பெண் பிள்ளைகளை தாக்காது இருக்கவும் அவர்கள் சுதந்திரமாகவும், அவர்கள் விரும்பிய மகிழ்ச்சியான வாழ்வினை வாழ வேண்டும் என்பதற்காகவும் பெண்களான நாங்கள் கீழ்வரும் கடிதத்தினை எமது இளம் பெண் பிள்ளைகளுக்கு எழுதியுள்ளோம்.
பெண்கள் வன்முறைகளற்ற வாழ்வு வாழுதலுக்கான உலகளாவிய “நூறு கோடி பெண்களின் எழுச்சி” நாளாகிய இன்று 14 பெப்ரவரியில் பெண்களை ஓரங்கட்டும் அனைத்துக் கருத்தியல்கள் செயற்பாடுகளையும் தாண்டி நாம் எழுச்சி கொள்வோம்.
இன்று மாணவிகளாகவும், இளம் பெண்களாகவும் இருக்கும் உங்களுக்கு, நீங்கள் வாழும் அதே சமூகங்களில் வளர்ந்து, வாழ்ந்து வரும் சக பெண்களாகவும் சகோதரிகளாகவும், நண்பிகளாகவும் உள்ள நாங்கள் மனந்திறந்து இந்தக் கடிதத்தினை உங்களுக்கு எழுதுகின்றோம், பெண்களது உரிமைகளுக்காகவும் அனைவரதும் உரிமைகளுக்காகவும் காலங்காலமாகப் போராடிக் கொண்டிருக்கும் பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளர்களில் இன்று வாழ்ந்து கொண்டிருப்பவர்களுள் நாமும் சிலராவோம்.
பெண்களும் ஏனைய அனைத்து இளையோரும் அறிவு திறன்களிலும், கல்வியிலும் மேம்படுவதில் ஏற்பட்டுள்ள பலவிதமான இடைஞ்சல்களுடன் இன்று ஆசிரியர்கள் அணியும் ஆடை குறித்து எழுந்துள்ள பிரச்சினை புதியதொரு இடையூறாக மாறிக்கொண்டிருக்கின்றது.
இது உங்கள் கல்வியையும் அதன் ஊடான மேம்பாட்டையும், உங்கள் சுதந்திரத்துக்கான உரிமைகளையும் பாதிக்கப் போவதை நாங்கள் கவலையுடன் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.
உங்கள் கல்வியும் அது வழங்கக் கூடிய பலவிதமான ஆளுமை விருத்தியுமே எங்களது முக்கிய அக்கறை ஆகும்.
அதுவே உங்களது முக்கிய அக்கறையாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம். இந்த நோக்கிலிருந்து பார்க்கும் பொழுது, உங்கள் கல்வி நன்கு அமைவற்கு அடிப்படையில் என்ன தேவை என சிந்திக்க வேண்டும்.
கல்விக்கு அடிப்படையான தேவை இடையூறின்றி நடைபெறும் பாடசாலை வகுப்புக்களும் அங்கு படிப்பிக்க அர்பணிப்பு, திறமை, அறிவாற்றல் மற்றும் ஆளுமை கொண்ட ஆசிரியர்களுமே ஆகும்.
அத்துடன் முக்கியமாகப் பெற்றோரும் உங்கள் படிப்பினை முதன்மைப்படுத்த வேண்டும். ஆனால் மேற்குறிப்பிட்ட பிரச்சினையின் ஊடாக இவை அனைத்தும் சில மாணவிகளுக்கு இன்று மறுக்கப்படுவது ஏன்?
நாளை எல்லா மாணவிகளுக்கும் மறுக்கப்படுவதற்கும் அடிப்படையாக அமையப் போகும் இத்தகைய விடயங்களுக்கு காரணமாகப் கூறப்படுவது பண்பாடு என்பதாகும். பண்பாடு என்ற பெயரில் காலத்துக்கு காலம் பெண்கள் மீது நிர்ப்பந்திக்கப்படும் விடயங்கள் எவ்வளவோ உள்ளன.
இவற்றைக் காவுகிறவர்களாகவும் எங்களது பண்பாட்டு அடையாளம் என்று நம்ப வைக்கப்படும் விடயங்களை வைத்து மற்றப் பெண்களை அச்சுறுத்துபவர்களாகவும் நாங்கள் இருக்கப் போகின்றோமா?
பண்பாட்டின் பெயரால் பெண்களை வைத்து நடாத்தப்படும் வன்முறை அரசியல்களுக்கு நாங்கள் துணை போகப் போகின்றோமா?
பெண்களுக்கு கல்வி வழங்குவது, வாக்குரிமை வழங்குவது பெண்களை நடமாட விடுவது, இவை எல்லாம் நமது பண்பாடு அல்ல என்று ஒரு காலத்தில் பெண்கள் அடக்கி வைக்கப்பட்டதை நாம் மறந்துவிடக் கூடாது.
அந்த அடக்குமுறைகளைத் தாண்டிப் பெண்கள் இன்று பல தளங்களிலும் சாதித்துக் கொண்டிருக்கின்றோம் என்பது பெருமைக்குரியதாகும்.
வாக்குரிமை, கல்வி உட்பட நாங்களும் நீங்களும் இன்று சாதாரணமாக அனுபவிக்கும் பல உரிமைகள் எங்களுக்கு முன்னர் முன்னோடிகளாக வாழ்ந்த பலரது போராட்டத்தின் விளைவாகவே கிடைக்கப் பெற்றது.
இந்த உரிமைகளை இன்னமும் மேம்படுத்தி தொடர்ந்து அனுபவிக்க இன்று நம்மீதுள்ள அடக்குமுறைகளை நாங்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
பண்பாடு, இனம், மதம் என்ற பெயரில் எந்த இன மத சமூக குழுக்களைச் சேர்ந்தோராயினும் அப் பெண்களது வளர்ச்சிக்கும் முழுமையான வாழ்விற்கும் உருவாக்கப்படும் இடையூறுகளை இணைந்து தகர்க்க வேண்டும்.
முடியாவிட்டால் ஆகக் குறைந்தபட்சம் யாராவது பெண்களுக்கு இடையூறுகளும் வன்முறைகளும் ஏற்படுத்தப்படுவதற்கு நாமும் பங்காளர்களாகக்கூடாது. இன்று நாங்கள் பெண்கள் ஆடைப் பண்பாட்டின் பெயரால் பகடைக்காய்களாகப் பாவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
பண்பாடு வெறும் வெளித் தோற்றத்திலும் ஆடையிலும் மட்டுப்படுத்தப்படுவதல்ல. பண்பாடு மாறாத மாற்ற முடியாத விடயமுமல்ல. ஆங்கிலேயரின் ஆடைகள் ஆண்களது பொது உத்தியோக பண்பாட்டு ஆடைகளாக அனைத்து இனத்தவராலும் கேள்விகள் இன்றி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
ஆனால் பெண்களின் விடயத்தில் மட்டும் அறிவு திறனை விட பெண்களின் வெளித்தோற்றமும் குறிப்பிட்ட ஆடைகளும் பண்பாட்டின் பெயரால் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. எங்களது என்று கூறப்படும் இன, மத அடையாளங்கள் நாங்கள் பெண்களாக உருவாக்கியதல்ல.
இன்று எங்கள் பண்பாடாகக் கூறப்படும் ஆடையை அதே விதமாக எங்கள் தாய்மாரோ, பாட்டிமாரோ அணிந்ததுமில்லை. அந்தந்தக் காலத்தில் செல்வாக்குப் பெற்ற இனக்குழுவால், இனமத தலைமைத்துவங்களால் குறிப்பாக வர்த்தகத்தால் வடிவமைக்கப்படும் ஆடைகளையே நாங்கள் எங்களது பண்பாடாக நம்ப வைக்கப்படுகின்றோம்.
இப்படியான பெரும் ஆதிக்கம் வாய்ந்த கட்டமைப்புக்களுடனான போராட்டம் விரைவில் முடியப்போவதல்ல. ஆனால் எங்களது பண்பாடுகளைத் தீர்மானிப்பதில் நல்ல விழுமியங்களை நாங்கள் தெரிவு செய்யலாம். ஒரு சமூகத்தின் பண்பாடு அவர்கள் தங்களுள் ஒவ்வொருவரையும் ஏனையோரையும் எவ்வளவு மரியாதையாக நடாத்துகின்றோம் என்பதில் இருக்க வேண்டும் என்ற முடிவினை உங்கள் மனதில் நீங்கள் எடுக்கலாம்.
அதனை உங்கள் தோழியருடன் பகிர்ந்து கொள்ளலாம். பற்பல பண்பாடுகளினூடே ஒத்துவாழும் அமைதியான சமூகங்களே மனித வளர்ச்சிக்கு உகந்தது என மனித இன வரலாறு மட்டுமல்ல, இந்நாட்டு வரலாறும் நமக்கு பாடம் புகட்டியுள்ளது.
ஒவ்வொரு சாதி- இன-மத குழுக்களும் தங்களது உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதை உறுதிப்படுத்தவதுடன் ஏனைய சமூகத்தவரும் இதே விதமாக அனைத்து உரிமைகளையும் அனுபவிப்பதை உறுதிப்படுத்தும் போதுதான் ஒட்டுமொத்த மானுட மேம்பாடு சாத்தியமாகும்.
இத்தகைய ஆழமான சிந்தனைகளுக்குள் இன்று நீங்கள் முக்கியமாகச் சிந்திக்க வேண்டியது, உங்கள் கல்வி நன்றாகவும் இடையூறின்றியும் தொடர்வதற்கு, உங்களுக்கு என்ன தேவை என்பது தான்? உங்களது கல்விக்கும், வளர்ச்சிக்கும், நமது ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கும் ஆசிரியர்களின் அறிவு திறன் முக்கியமா? அவர்கள் என்ன ஆடைகள் அணிகிறார்கள் என்பது முக்கியமா?
எங்கள் சின்ன நண்பிகளே! கல்வி மேம்பாட்டுக்கான நோக்கிலிருந்து உங்களை விலக்க
முயற்சிக்கும் அனைத்துக் குரல்களும் வன்முறையை வளர்த்து, உங்களையும் உங்களது சமூகத்தையும்
வளர்ச்சி குன்றச் செய்யும் குரல்கள். இதுதான் உண்மை. இந்த உண்மையை நீங்களும்
உணர்ந்து பிறருக்கும் உணர வையுங்கள் எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



