இலங்கையில் நடுவீதியில் கோர விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்ற போராடிய வைத்திய தம்பதி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன பகுதிக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மனிதாபிமானப் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து மிதிகம நோக்கி சென்ற கன்டெய்னர் லொறி ஒன்று வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பின்னால் வேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கன்டெய்னர் லொறியின் பின் பகுதியில் மோதியது.
இதனால் குறித்த வாகனத்தின் முன்பகுதி முற்றாக நசுங்கியது. இதில் அதன் சாரதி உட்பட மூவர் வாகனத்தின் இரும்புத் தகடுகளுக்குள் சிக்கி, பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.
போராடிய வைத்திய தம்பதி
விபத்து நடந்த போது அந்த வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வைத்தியர் வித்வ களுதொட்ட மற்றும் வைத்தியர் கித்மா குணரத்ன ஆகிய தம்பதியினர், உடனடியாகச் செயற்பட்டு அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக இரும்பு இடுக்குகளுக்குள் சிக்கியிருந்த காயமடைந்தவர்களுக்கு அருகிலேயே இருந்து, அவர்களுக்கு தேவையான முதலுதவிகளையும், ஒக்சிஜனையும் வழங்கி அவர்களின் உயிரை காப்பாற்ற போராடியுள்ளனர்.
தமது உயிரைப் பொருட்படுத்தாது, இக்கட்டான சூழலில் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவத் தம்பதியினரின் செயல் அனைவரதும் பாராட்டைப் பெற்றுள்ளது.