மனித உரிமை மீறல்களுக்கு இடமில்லை! - சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு (VIDEO)
நாட்டின் சவாலை எதிர்கொள்ள தேசப்பற்றுள்ள அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்று ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறும் தேசிய நிகழ்வின்போது ஜனாதிபதி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
“நாட்டின் இறைமைக்கு பாதகம் ஏற்படும் வகையில் செயற்படும் பொய்யான பிரசாரங்களை கண்டு பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது. பொதுமக்கள் தமது சொந்த சிந்தனையில் செயற்படவேண்டும் என்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
ஒற்றையாட்சி, இறைமை மற்றும் சுயகௌரவம் என்பவற்றை பாதுகாக்க நாட்டின் தலைவர் என்ற வகையில் தாம் அர்ப்பணிப்புக்கு தயார் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அதனை தாம் ஏற்கனவே மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நீதியை சர்வதேசத்தின்பால் நின்று உரியமுறையில் கடைப்பிடிப்பதற்கும் மனித உரிமை மீறல்களுக்கும் இலங்கையில் இடம் இல்லை. இந்த விடயங்களை முன்வைத்து சில சக்திகள், நாட்டிற்கு எதிராக செயற்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் அடிப்படைவாதத்துக்கு இலங்கையில் இடம்தரப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் கொள்கையான இயற்கை விவசாயம் உட்பட்ட விடயங்கள் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, தாம் பதவியேற்றபோது, கஸ்டமான சூழ்நிலையே நிலவியது, எனினும் நாட்டின் அபிவிருத்தி உட்பட்ட விடயங்கள் உரிய வகையில் செயற்படுத்தப்பட்டன என்றும் தெரிவித்தார்.
அத்துடன் நாட்டின் வரலாற்று சின்னங்களை பாதுகாக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இலங்கையின் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள், நாட்டின் அபிவிருத்திக்காக பாடுபட்டுள்ளனர்.
அதிலும் வெளிநாடுகளில் பணிபுரிவோர் நாட்டுக்கு அன்னிய செலவாணியை தேடித்தருவதன் மூலம் பாரிய சேவைகளை ஆற்றுகின்றனர். இந்த தருணத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை நாட்டில் செயற்படும் பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுமக்களுக்கு சிறந்த உதாரணங்களாக விளங்கவேண்டும் என்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.