செம்மணி மனித எச்சங்கள்: உண்மைகளை வெளிக்கொண்டு வர வழி கூறும் சுமந்திரன்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்படல்கள் தொடர்பில் கலாநிதி தேவநேசன் நேசையா தலைமையிலான குழுவினரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உள்ள விவரங்களை தற்போது செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் கண்டறியப்படும் மனித எச்சங்களுடன் தொடர்புபடுத்தி ஆராய்வதன் ஊடாக பல்வேறு உண்மைகளை வெளிக்கொணர முடியும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கையளிக்கப்பட்ட அறிக்கை
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கென கலாநிதி தேவநேசன் நேசையா தலைமையில் கே.எச்.கமிலஸ் பெர்னாண்டோ, ஜெமிஸா இஸ்மாயில் மற்றும் எம்.சி.எம்.இக்பால் ஆகிய உறுப்பினர்களுடன் கூடியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை 2003ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் திகதி ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது.
1990 - 1998ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் பதிவான வலிந்து காணாமல் ஆக்கப்படல் சம்பவங்கள் மற்றும் அந்த பகுதிகளின் வீட்டு உரிமையாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டமை என்பன தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென நியமிக்கப்பட்ட இந்த குழுவின் அறிக்கையில், 1990 - 1998க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர், வயது, காணாமல் ஆக்கப்பட்ட ஆண்டு, இறுதியாகச் சென்றிருந்த இடம், நேரடி சாட்சி, முறைப்பாடு அளித்தவர் விவரம் உள்ளிட்ட அவசியமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
உண்மைகள்
எனவே, இது பற்றிச் சுட்டிக்காட்டிய சுமந்திரன், அந்த அறிக்கையில் உள்ள விவரங்களையும் தற்போது செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் கண்டறியப்படும் மனித எச்சங்கள் பற்றிய விவரங்களையும் ஒன்றிணைத்து ஆராய்வதன் ஊடாக இந்த மனித எச்சங்களுக்குச் சொந்தமான நபர்கள் தொடர்பான பல்வேறு உண்மைகளை வெளிக்கொணர முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




