தடைவிதிக்கப்பட்ட யூரியா எவ்வாறு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது - ஜேவிபி கேள்வி
இரசாயன பசளைகளை இறக்குமதி செய்யத் தடை விதித்த போதிலும், 10,000 மெட்ரிக் தொன் யூரியா கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஜேவிபி இன்று குற்றம் சுமத்தியுள்ளது.
ஜூலை 9 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு யூரியா கொண்டு வரப்பட்டதாக நம்பகமான ஆதாரங்கள் மூலம் தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தடையை மீறி இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய அரசாங்கத்திற்குச் சார்பான நிறுவனங்களை அரசாங்கம் அனுமதித்ததா என்று அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.
இரசாயன பசளைகள் இறக்குமதி செய்வதற்கான தடை குறித்த தனது முடிவை மாற்றியமைக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.
எனவே இந்த விஷயத்தில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் நலிந்த ஜெயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
யூரியா, எவ்வாறு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.