இலங்கை கிரிக்கெட்டின் மீதான ஐ.சி.சி இன் தடை எவ்வளவு தீவிரமானது....!
பாரியளவிலான அரசியல் தலையீடு காரணமாக, இலங்கை கிரிக்கெட் (SLC) நிர்வாகத்தின் உறுப்புரிமை, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையால் (ஐ.சி.சி) இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகத்தில் அரசாங்கம் தலையிடுவதைத் தடுப்பதற்கான ஒரு எச்சரிக்கையாக ஐ.சி.சி.யின் இந்த முடிவு கருதப்படுகின்றது.
இடைநிறுத்தத்தின் தாக்கம்
ஐசிசி உலகக் கிண்ண தொடரில் இருந்து இலங்கை கிரிக்கெட் அணி தோல்வியுற்று நேற்றையதினம் நாடு திரும்பியிருந்தது. இதனையடுத்து, இவ்வருடம் டிசம்பர் வரை நாட்டில் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெற போவதில்லை.
அத்துடன், ஜனவரி வரை ஐ.சி.சி.யின் எந்த நிதியும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு செல்ல வேண்டியதில்லை.
எனவே, தற்போதுள்ள சூழ்நிலையில், இந்த இடைநிறுத்தமானது இலங்கை கிரிக்கெட்டில் உடனடியாக பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை.
ஐ.சி.சி கூட்டங்கள்
ஐ.சி.சி.யின் காலாண்டுக்கான கூட்டங்கள் நவம்பர் 18-21 திகதிகளில் அஹமதாபாத்தில் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஐ.சி.சி வாரியம், இலங்கை கிரிக்கெட்டின் நிதி, நிர்வாகம் மற்றும் தேசிய அணி தொடர்பான விடயங்களில் காணப்படும் அரசியல் தலையீட்டை பற்றி விவாதிக்க, ஒன்லைனில் கூடியது.
மீண்டும் நவம்பர் 21ம் திகதி கூட்டமொன்று நடாத்தப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
அதேவேளை, தற்போது இந்தியா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகத் தலைவர் ஷம்மி சில்வா, வெள்ளிக்கிழமை (10.11.2023) நடைப்பெற்ற ஐ.சி.சி.யின் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகள், கூட்டங்களில் பார்வையாளர்களாக கலந்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளமையால், அஹமதாபாத்தில் திட்டமிடப்பட்டுள்ள ஐசிசி கூட்டங்களிலும் ஷம்மி சில்வா கலந்துகொள்ள வாய்ப்புள்ளது.
ஐ.சி.சி.யின் நிபந்தனைகள்
ஐ.சி.சி.யின் இந்த இடைநிறுத்த முடிவானது வெளித்தரப்பினருக்கு ஆச்சரியத்தை கொடுத்தாலும், இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு எவ்விதமான ஆச்சரியத்தையும் வழங்கப்போவதில்லை.
இவ்வாறானதொரு தீவிர முடிவை நடைமுறைப்படுத்துமாறு, ஐ.சி.சி.யிடம் வலியுறுத்தியது இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தான்.
மேலும், ஐ.சி.சி வாரியம் இன்று (11.11.2023) வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கிரிக்கெட் ஒரு உறுப்பினராக அதன் நிபந்தனைகளை கடுமையாக மீறியுள்ளது என்றும் அதன் உள்விவகாரங்கள் அரசாங்கத்தின் தலையீடின்றி தன்னாட்சி முறையில் நிர்வகிக்கப்படுகின்றது என உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன், இடைநிறுத்தத்தின் நிபந்தனைகள் ஐசிசி வாரியத்தால், உரிய நேரத்தில் தீர்மானிக்கப்படும்.
நாடாளுமன்றத்தில் கிரிக்கெட்
இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து, அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இடைக்கால குழுவை நியமித்த போதும், கலைக்கப்பட்ட வர்த்தமானிக்கு நீதிமன்றத்தால் 14 நாட்கள் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஒரு நாளின் பின்னர் வாரியம் மீட்டெடுக்கப்பட்டது.
அன்றிலிருந்து இலங்கை நாடாளுமன்றத்தில் கிரிக்கெட் விவகாரங்கள் குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.
ஐ.சி.சி.யின் இடைநீக்க அறிவிப்பு வெளியான வரை, சில்வா தலைமையிலான வாரியம்தான் நாட்டில் கிரிக்கெட்டை நிர்வகித்து வந்தது.
எனவே, இடைக்காலக் குழு நிர்வாகத்தில் இருந்தாலும், ஐ.சி.சி.யின் இடைநீக்கத் தீர்மானத்துக்கு முன் அக்குழுக்கான நியமனம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருக்கவில்லை.
இடைநிறுத்த தீர்மானத்தின் எதிர்காலம்
மேலும், அரசாங்கத்தின் தலையீட்டிற்காக 2019 இல் சிம்பாப்வே கிரிக்கெட் இடைநிறுத்தப்பட்ட பின்னர், கடந்த நான்கு ஆண்டுகளில் ஐ.சி.சி.யால் இடைநீக்கம் செய்யப்பட்ட இரண்டாவது முழு உறுப்பினர் இலங்கை கிரிக்கெட் ஆகும்.
எனினும், சிம்பாப்வேயில் இடம்பெற்ற நாட்டின் அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளைக்குமான தடை மற்றும் நிதியுதவி முடக்கம் போன்றல்லாமல் இலங்கையின் விடயத்தில், ஐ.சி.சி கவனமாக அடியெடுத்து வைக்கும்.