இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்
இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் முடியும் வரை சர்வதேச நாணய நிதியம் கடன் நிவாரணம் வழங்காது என அமெரிக்காவின் ஜோன் ஹோக்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியை Deborah Brautigan சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு நாட்டில் வன்முறை நெருக்கடி நிலை ஏற்படும் போது சர்வதேச நாணய நிதியம், அந்த நாட்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியாது. எனவே, ஸ்திரமான அரசாங்கம் ஒன்றில் நிதியமைச்சர் நியமிக்கப்படும் வரை, நிதி தொடர்பில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்கள் நடத்தப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி
CNBC செய்தி சேவையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பேராசிரியை இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் தனது பணத்தை மீளச் செலுத்துவதற்கான இலங்கையிடமிருந்து உத்தரவாதம் தேவை என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடனைத் திருப்பிச் செலுத்தாத முடியாத நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்காது. நாட்டின் நிதி நிலைமையை ஒழுங்காக பேணி, நாடு தனது வருமானத்தையும், சரியாக செலவுகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் உத்தரவாதம்
எனவே, இலங்கையினால் உத்தரவாதத்தை வழங்க முடியாவிட்டால், நாணய நிதியிலிருந்து எதுவும் வழங்கப்படாது.
அத்துடன், நெருக்கடி நிலை நீடிக்கும் வரை, இலங்கைக்குத் தேவையானவற்றை வழங்க முடியாது என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.