ரணிலின் அதிரடி ஆட்டங்களின் பின்னணியில் கோட்டாபய - அம்பலமான சதித்திட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இரட்டை நிலைப்பாட்டுத் தன்மை குறித்து அரசியல் மட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற போது, ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தும் நடத்த அனுமதி வழங்கப்படும் என்றும் அதனை தடுக்க கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.
எனினும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அன்றிரவே அதே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறைகளை பிரயோகிக்க ரணில் உத்தரவிட்டிருந்தார்.
ரணிலின் திட்டம்
கோட்டாகோகம போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டிருந்த ஜனாதிபதி செயலகத்தை அதிரடியான முறையில் இராணுவத்தினர் மீட்டிருந்தனர்.
இது தொடர்பில் சர்வதேச மட்டத்தில் அழுத்தங்கள் எழுந்துள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியும் இலங்கைக்கு கிடைக்கும் காலம் பின்தள்ளப்பட்டுள்ளது.
அரசியல் சாணக்கியம் கொண்ட ரணில் விக்ரமசிங்கவினால் எவ்வாறு இவ்வாறான அடக்கு முறைகளை பிரயோகிக்க முடிந்தது. இதன் பின்விளைவுகள் குறித்து அவர் ஏற்கனவே தெரிந்திராமல் இருந்தாரா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
பின்னணியில் கோட்டாபய
தற்போதைய நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை முற்றாக அகற்றும் நடவடிக்கையில் சமகால ஜனாதிபதி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இருக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஒன்பதாம் திகதி ஏற்பட்ட மக்கள் புரட்சி காரணமாக அவர் நாட்டிலிருந்து தப்பியோட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்நிலையில் மாலைதீவு சென்றவர் தற்போது சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ளார்.எனினும் தொடர்ந்தும் அவர் அங்கு தங்கியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் இலங்கை திரும்புவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நாடு திரும்பும் போது முன்னாள் ஜனாதிபதி என்ற அனைத்து சிறப்பு வரப்பிரசாதங்களும் பாதுகாப்பும் அவருக்கு வழங்கப்படவுள்ளன.
மக்களுக்கு எதிரான அடக்குமுறை
மக்கள் புரட்சி காரணமாக தப்பியோடிவர் மீண்டும் நாடு திரும்பும் போது மக்கள் கொதிந்தெழ வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக ஆர்ப்பாட்டங்களை முழுமையாக அடக்க ஜனாதிபதி திட்டமிட்டிருக்கலாம். அல்லது அதற்கான அழுத்தம் ராஜபக்ச தரப்பினால் கொடுக்கப்பட்டிருக்கலாம்.
பொதுத் தேர்தலில் படுதோல்வி அடைந்த ரணில் விக்ரமசிங்க ராஜபக்சர்களின் பூரண ஆதரவுடன் ஜனாதிபதி சிம்மானத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ராஜபக்சர்களுக்கு எதிரான ஏற்பட்டுள்ள அழுத்தங்களை குறைத்து அவர்களை சுயமான செயற்பட வைக்கும் நோக்கில் ரணில் அதிரடியாக செயற்பட்டு வருவதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாகவே அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தி மக்கள் வீடுகளில் முடக்கி வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தொடரும் அவசரகால சட்டம்
அவசர கால சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பதற்காக நாடாளுமன்றம் நாளை கூடவுள்ளது. இதன்மூலம் மேலும் ஒரு மாதத்திற்கு அவசரகால சட்டம் நடைமுறையில் வைக்கப்படவுள்ளது.
அதேவேளை சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ள கோட்டாபய ராஜபக்ச இலங்கை திரும்பவுள்ளமை குறித்து அமைச்சரவை கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.