இலங்கை பொருளாதார சரிவை எவ்வாறு சமாளிக்கப்போகிறது? ஹர்ஷ டி சில்வா கேள்வி
தற்போதைய பொருளாதார முட்டுக்கட்டைகளிலிருந்து வெளியேற சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு செல்ல இலங்கை கட்டாயப்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இதனை குறிப்பிட்டார்.
இலங்கையில் பொருளாதாரம் மேலும் சரிந்தால் சமூக அமைதியின்மை தவிர்க்க முடியாதது என்று அவர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு அரசாங்கம் சென்றால் மட்டுமே இத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்க முடியும்" என்று ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
"ஃபிட்ச் மதிப்பீடுகளின் அறிக்கையின் படி, அடுத்த சில ஆண்டுகளுக்கான மொத்த வெளிநாட்டு கடன் சேவைகள் 29 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும், அதே நேரத்தில் இந்த ஆண்டு உட்பட ஒவ்வொரு ஆண்டும் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் தீர்க்க வேண்டும்.
இருப்பினும், இலங்கைக்கு 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் மாத்திரமே பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு இருப்புக்களாக இருக்கும். இந்த நிலைமையை இலங்கை எவ்வாறு சமாளிக்கப்போகிறது? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வேதனம், ஓய்வூதியம் மற்றும் கடன்களுக்கான வட்டி ஆகியவற்றிற்கான இலங்கையின் செலவுகள் சுமார் 727 பில்லியன் ரூபாய்களாக இருக்கும் எனினும் வருமானம் 482 பில்லியன் ரூபாவாக மாத்திரமே இருக்கும் அவர் தெரிவித்தார்.
இலங்கை அண்மைக்காலத்தில் எதிர்கொண்ட நாணய பிரச்சினை காரணமாகவே, அரசாங்கம் பணத்தை அச்சிட்டது. முந்தைய அரசாங்கமும் அதை ஓரளவிற்கு செய்தது என்றும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.