நன்னடத்தை நிலையங்களிலிருந்து வெளியேறுவோருக்கு யாழில் வீடமைப்புத் திட்டம் - அமைச்சர் உறுதி
நன்னடத்தை பராமரிப்பில் இருந்து வெளியேறிய பயனாளிக்கு வீடொன்றினை கையளித்துள்ளதுடன், மேலும் 48 வீடுகளை கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் நேற்று(25.11.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வீடமைப்புத் திட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு பொதி வழங்குவதற்கு 210 மில்லியன் ரூபாவும், முன்பள்ளி சிறார்களுக்கான காலை உணவு வழங்குவதற்கு 114 மில்லியன் ரூபாவும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுக்காக 5 மில்லியன் ரூபா, அதேபோல பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான விழிப்புணர்வு, சர்வதேச சிறுவர் தினம், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் வேலைத் திட்டங்கள் போன்ற பல வேலைத் திட்டங்களுக்குப் மகளிர் விவகார அமைச்சினால் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதே போன்று, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஊடாக நடத்தப்படுகின்ற வேலைத் திட்டங்களுக்கு 11 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நன்னடத்தை பராமரிப்பில் இருந்து 18 வயது பூர்த்தியானதுக்குப் பின்னர் சமூக மயமாகும் சிறார்களுக்கான வீடமைப்பு திட்டத்துக்கு யாழ் மாவட்டத்துக்கு 49 வீடுகள் அமைப்பதற்காகத் தலா 2 மில்லியன் ரூபாய் வீதம் 98 மில்லியன் ரூபாவும் மேலதிகமாக ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
அந்த வகையில், யாழ்ப்பாணத்தில் நேற்று(25) நன்னடத்தை நிலையங்களில் இருந்து வெளியேறிய சிறார்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் கட்டப்பட்ட ஒரு வீட்டைப் பயனாளிக்கு கையளித்தோம்.
மேலும், 48 வீடுகள் முழுமைப்படுத்தி அந்தப் பயனாளிகளுக்கான வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
வாள்வெட்டுக் குழுவினரின் அட்டகாசம் அதிகரிப்பு - பொலிஸ் நிலையம் முன்பாகப் போராட்டத்தில் குதித்த மக்கள்