மலையகத்துக்கான வீட்டுத்திட்டம் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும் : எம்.பி. ரமேஷ்வரன் (Video)
“மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும், கோவிட் நெருக்கடி நிலைமை இருந்தாலும் மலையகத்துக்கான அபிவிருத்திகள் நிறுத்தப்படமாட்டாது " என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"மலையக சமூகத்தின் வளர்ச்சியென்பது கல்வியில் தான் தங்கியுள்ளது என்பதை நாம் உறுதியாக நம்புகின்றோம். அதனால் தான் ஐயா சௌமிய மூர்த்தி தொண்டமான், தலைவர் ஆறுமுகன் தொண்டமான் காலம் முதல் இன்று வரை கல்விக்கு நாம் அதிக நிதியை ஒதுக்குகின்றோம். கல்வி சார்ந்த அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றோம்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகவும் இன்று அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இந்நிலைமை மாறுவதற்கும் கல்வியே எமக்கு கைகொடுக்கும்.
எமது பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் கண்டால் நிச்சயம் வீறுநடை போடலாம். அதற்கு பக்கபலமாக காங்கிரஸ் துணை நிற்கும்.
கோவிட் நெருக்கடி காலத்திலும் நாட்டுக்கு தேவையான முக்கியமான அபிவிருத்தி திட்டங்கள் நிறுத்தப்படவில்லை. அதற்கான பணிகளை நிதி அமைச்சர் சிறந்த முறையில் முன்னெடுத்து நிதி ஒதுக்கீடுகளை வழங்கிவருகின்றார். மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்குவதில் ஒரு சில தோட்டக்கம்பனிகள் இழுத்தடிப்பு செய்துவருகின்றன. இது தொடர்பில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. எனவே, விரைவில் சாதகமான சூழ்நிலை உருவாகும். எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் நுவரெலியா பிரதேச சபை தலைவர், உறுப்பினர்கள், பொலிஸார் உட்பட
பலரும் கலந்து கொண்டனர்.










