வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள இலவச வீட்டுத்திட்டம்: பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்து
வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள இலவச வீட்டுத்திட்டம் தொடர்பில் பயனாளர்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்துவது அவசியமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் (P.S.M. Charles) தெரிவித்துள்ளார்.
இலவச
வீட்டுத்திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் ஆளுநர்
செயலகத்தில் நேற்று (03.04.2024) நடைபெற்ற கூட்டத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சூரியப் படலங்கள் பொருத்தப்பட்ட கூரைகளுடன் நிர்மாணிக்க திட்டமிடப்பட்ட இந்த வீட்டுத் திட்டமானது தற்போது சற்று மாற்றப்பட்டு, கூரைகளில் சூரியப் படலங்கள் அற்ற வகையில் வீடுகளை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலவச வீடுகள்
அதேவேளை, வீடுகளின் கூரைகளில் பொருத்தப்படவிருந்த சூரியப் படலங்களை ஒன்று சேர்த்து, அரச காணிகளில் சூரியப் படல பூங்காக்களை நிர்மாணிக்கும் வகையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது.
எனினும், தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளர்களுக்கான இலவச வீடுகள் நிர்மாணித்து வழங்கப்படும் என திட்டத்தை முன்னெடுத்துள்ள நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, இதுவரை 31 ஆயிரத்து 730 பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு இவர்களுக்கான வீட்டுத்திட்டத்தை வெகு விரைவில் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி தமது நிறுவனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இறுதியாக நடைபெற்ற யாழ். மாவட்ட (Jaffna) ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, நெடுத்தீவு மக்களையும் புதிய வீட்டுத்திட்டத்திற்குள் உள்வாங்குமாறு ஆளுநர் குறித்த நிறுவனத்திடம் கோரியுள்ளார்.
அவர்களுக்கான சூரியப் படலங்களை பொருத்துவதற்கு தேவையான காணிகளை ஒதுக்கி தருவதாகவும் ஆளுநர் உறுதியளித்துள்ளார்.
கள ஆய்வு
இந்த வீடமைப்புத் திட்டத்துடன் இணைந்ததாக பூநகரி குளத்திற்கு அருகில் சூரியப் படல பூங்காக்களை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான சுற்றாடல் தொடர்பான கள ஆய்வு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக சூரியப் படல திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனம் கூறியுள்ளது.
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த பாரிய செயற்றிட்டம் தொடர்பில் பயன்பெறவுள்ள அனைத்து தரப்பினர்களுக்கும் கிராம மட்டத்தில் சந்திப்புக்களை ஏற்படுத்தி தெளிவுப்படுத்த வேண்டும் என ஆளுநர் கூறியுள்ளார்.
இதனூடாக புதிய வீடமைப்புத் திட்டம் தொடர்பில் மக்களிடம் காணப்படும் சந்தேகங்களை குறித்த நிறுவனம் தீர்க்க வேண்டும் என கூறிய ஆளுநர், மக்கள் சந்திப்புக்கு தேவையான முழு ஒத்துழைப்புகளையும் வழங்குமாறு வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவனுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |