குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக நிர்மாணிக்கப்படும் வீடுகளின் கட்டுமானப் பணிகள் 50 வீதம் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர வீடு இல்லாத குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக இந்த வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் இதன் கட்டுமானப் பணிகள் ஐம்பது சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகள்
அதன்படி, 2021ல் 12,231 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு, அதில் 6,039 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 2022ல் 1,465 வீடுகளின் பணிகள் தொடங்கப்பட்டாலும், 25 வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 1,215 வீடுகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அதில் 727 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் மினுவாங்கொடை தொகுதியில் மட்டும் 159 வீடுகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 78 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது கடந்த வருடங்களில் ஆரம்பிக்கப்பட்ட முடிக்கப்படாத வேலைத்திட்டங்களின் பணிகளை நிறைவு செய்வதற்காக 3,750 மில்லியன் ரூபாவை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.