மருதமுனை - மேட்டுவட்டை வீட்டுத் திட்டம்! பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட வீடுகள் (Video)
கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் நிகழ்வில் கலந்து கொண்டு வீடுகளை கையளித்துள்ளார்.
அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அண்மையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றபோது ஊடகவியலாளர்
ஒருவர் மருதமுனை - மேட்டுவட்டை வீட்டுத் திட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பியதுடன் வீடுகள் எப்போது மக்களுக்கு கையளிக்கப்படும் என்ற கேள்வியையும் கேட்டிருந்தார்.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் விளக்கம் அளிக்கும்போது,
மருதமுனை 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேட்டுவட்டை 65 வீட்டுத்திட்டத்திற்காக இதுவரை பயனாளிகள் தெரிவு செய்யப்படுவதில் தொடர்ந்தும் ஏற்பட்ட இழுபறி நிலை காரணமாக இந்த வீடுகள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும்.
உரிய பயனாளிகள் தேர்வு
குறித்த திட்டத்தினை இழுத்தடிக்காமல் உரிய பயனாளிகளை தேர்வு செய்து அந்த வீடுகளை வழங்கி நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் இந்த வீட்டுத் தொகுதி மக்களிடம் கையளிக்கப்படும்.
இதற்காக கல்முனை பிரதேச செயலாளர் உரிய நடவடிக்கைகளை எடுத்து உரிய பயனாளிகளை தெரிவு செய்யும் பட்டியலை பூரணப்படுத்துமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
வீட்டுத்திட்டம் மக்களிடம் கையளிப்பு
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக குறித்த வீட்டுத்திட்டத்தை மக்களுக்கு கையளிப்பதற்காக மருதமுனைக்கு
அண்மையில் விஜயம் செய்த எஸ்.எம்.எம்.முஷாரப் 65 மீற்றர் வீட்டுத்திட்டத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.
இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமைகளை விளக்கியுள்ளார்.
இதற்கமைவாக ஏப்ரல் 10ஆம் திகதி இந்த வீடுகளை கையளிப்பதற்கான செயற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபுடன் இணைந்து கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார்.
இவ்வீட்டு திட்டத்தின் ஒரு தொகுதி வீடுகள் இன்று(11.04.2023) மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
குறித்த வீட்டுத் திட்டத்தை மக்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கையிலும் ஒழுங்குபடுத்துவதிலும் முழுமையாக செயற்பட்ட கல்முனை
பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ், நாடாளுமன்ற உறுப்பினரின் கல்முனை பிரதேச
ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் பீ.எம்.எம்.ஜ ஃபர் ஆகியோருக்கு தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




